தோழா படத்தில், ஒரே ஒரு துளி கலர் பெயின்ட் மட்டும் உள்ள ஓவியம் இருக்கும். அது கோடிகளில் விற்பனையானதைக் கண்டு நடிகர் கார்த்தி அதிர்ந்து போவார். அதே போல ஒரு சம்பவம் தான் இத்தாலியில் நிகழ்ந்துள்ளது. ஆனால் இந்த நிகழ்வு அதற்கும் ஒரு படி மேலே. இதையா இந்த விலைக்கு விற்றார்கள் என கூறும்படி உள்ளது அந்த நிகழ்வு.
அப்படி என்ன ஓவியம் அது? பொதுவாக அனைவரும் உண்ணும் வாழைப்பழம்தான் அது. வாழைப்பழ ஓவியம் அல்ல, அது உண்மையிலேயே வாழைப்பழம் தான். இத்தாலிய ஓவியரான மொரிஸியோ கட்டலன் (Maurizio Cattelan) வாழைப்பழத்தை சுவரில் டேப் கொண்டு ஒட்டி, அதற்கு காமெடியன் (Comedian) எனப் பெயர் வைத்து, 120,000 அமெரிக்க டாலருக்கு விற்றுள்ளார்.
ஆனால் இது இவரின் சுய யோசனை இல்லை என்று கலிஃபோர்னியா க்ளெண்டேலைச் சேர்ந்த, ஜோ மோர்போர்ட் (Joe Morford) கூறியுள்ளார். ஏற்கெனவே 2000-ம் ஆண்டிலேயே, வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சுப்பழத்தை சுவரில் ஒட்டி இப்படி தான் செய்துள்ளதாகத் தெரிவித்து, இது தன்னுடைய யோசனை எனக் கூறி காப்பி ரைட் மீறல் குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள மாவட்ட நீதிபதியும், இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி, வழக்கைத் தொடரலாம் என அனுமதித்துள்ளார்.
விக்குறதா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா…