புதுடெல்லி: உஸ்பெகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
உக்ரைன், தைவான் விவகாரங்களால் சர்வதேச அளவில் சீனா ஓரங்கட்டப்பட்டு வருகிறது. இதன்காரணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவில்லை.
எனினும் உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.
லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு இந்தியா, சீனா இடையிலான விரிசல் அதிகரித்து உள்ளது. இலங்கை துறைமுகத்துக்கு சீன உளவு கப்பல் அண்மையில் வந்தது, லடாக் மற்றும் வடகிழக்குமாநிலங்களில் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீற முயற்சிப்பது ஆகியவற்றால் இரு நாடுகளிடையே கசப்புணர்வு நீடித்து வருகிறது.
மேலும் ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அரங்குகளிலும் இந்தியாவுக்கு எதிராக சீனா செயல்பட்டு வருகிறது.
இந்த சூழலில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசினால் திருப்பு முனையாக அமையும் என்று கூறப்படுகிறது. எனினும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டில் பங்கேற்பது குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை.