வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனை மேற்கொண்டது குறித்து அவர், ‘ஆம்ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ.,வில் சேர்ந்தால் அனைத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளையும் முடிவுக்கு கொண்டு வருகிறோம், முதல்வர் பதவி வழங்குவதாகவும்’ தனக்கு வலைவீசியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. ஆம் ஆத்மி மூத்த தலைவரான மணீஷ் சிசோடியா துணை முதல்வராக உள்ளார். இவர், கலால் துறையையும் கவனித்து வருகிறார். தனியார் நிறுவனங்களுக்கும் உரிமம் வழங்கும் வகையில் மதுபான விற்பனை கொள்கையில், கடந்தாண்டு மாற்றம் செய்யப்பட்டது. இதில், சில தனியார் நிறுவனங்களுக்கு சலுகை காட்டப்பட்டதாகவும், இதனால் டில்லி மாநில அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு டில்லி துணை நிலை கவர்னர் உத்தரவிட்டார். அதன்படி, சிசோடியாவின் வீடு உட்பட, 21 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, சிசோடியா உட்பட 16 பேர் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். இதில் சிசோடியா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், தனக்கு பா.ஜ.,வில் சேர அழைப்பு வந்திருப்பதாக மணீஷ் சிசோடியா பகீரங்க தகவலை தெரிவித்துள்ளார்.
முதல்வர் பதவி
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோர் தேர்தல் பணிக்காக குஜராத் சென்றனர். ஆமதாபாத்தில் செய்தியாளர்களிடம் சிசோடியா கூறியதாவது: பா.ஜ.,விடம் இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், ‘ஆம் ஆத்மியை விட்டு வெளியேறி பா.ஜ.,வில் சேருங்கள், உங்கள் மீதான அனைத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளையும் முடிவுக்கு கொண்டுவருகிறோம்’ என்ற செய்தி வந்திருந்தது.
மேலும், எனக்கு முதல்வர் பதவி வழங்குவதாகவும் உறுதி அளித்தனர். ஆனால் நான் முதல்வர் ஆகுவதற்காக வரவில்லை, நாடு முழுதும் உள்ள மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வந்துள்ளேன். என் மீதான வழக்குகள் அனைத்தும் பொய்யானவை. நான் நேர்மையானவன் என்பதால் கெஜ்ரிவாலுடன் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
பாரத ரத்னா
இதனைத்தொடர்ந்து கெஜ்ரிவால் கூறியதாவது: அனைத்து குஜராத்திகளுக்கும் இலவச மற்றும் சிறந்த சுகாதார சேவையை வழங்குவோம் என்று உறுதியளிக்கிறோம். டில்லியை போலவே, குஜராத் நகரங்களிலும் கிராமங்களிலும் சுகாதார கிளினிக்குகள் திறக்கப்படும். அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவோம், தேவைப்பட்டால் புதிய அரசு மருத்துவமனைகள் திறக்கப்படும். கடந்த 70 ஆண்டுகளில் மற்ற கட்சிகளால் செய்ய முடியாததை மணீஷ் சிசோடியா செய்தார். அரசுப் பள்ளிகளை அவர் சீர்திருத்தினார். அப்படிப்பட்டவருக்கு பாரத ரத்னா கிடைக்க வேண்டும். ஒட்டுமொத்த நாட்டின் கல்வித்துறையும் அவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும், மாறாக அவர் மீது சிபிஐ சோதனை நடத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement