அபகரிக்கப்பட்ட வீட்டுடன் கூடிய நிலத்தை மீட்டுத் தரக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்த வணிகம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி தையல் நாயகி (51). இவரது தந்தை ரத்தினம் (70) மேலராதா நல்லூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் ரத்தினம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனக்குச் சொந்தமான வீட்டுடன் கூடிய நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரிடம் ரூ.30 ஆயிரத்துக்கு அடமானம் வைத்துள்ளார்.
இதையடுத்து கடன் தொகை ரூ.30 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்து சங்கரிடம் வீட்டுடன் கூடிய நிலத்தை திரும்பக் கேட்டுள்ளனர். ஆனால், பணத்தை பெற்றுக் கொள்ளாமல் வீட்டுடன் கூடிய நிலத்தை திரும்பக் கொடுக்க முடியாது என சங்கர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற தையல் நாயகி, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த காவல் துறையினர், தையல் நாயகியை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்த பெட்ரோல் பிடுங்கினர். தொடர்ந்து தையல் நாயகியை மீட்ட போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM