டெல்லி: ஊழல்வாதிகள் மற்றும் சதிகாரர்கள் முன் நான் தலைகுனிய மாட்டேன் என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆவேசமாக தெரிவித்துள்ளார். டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குபதிவு செய்தது. இந்நிலையில் இன்று குஜராத் மாநில பேரவை ேதர்தல் பிரசாரத்திற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன், மணீஷ் சிசோடியா அகமதாபாத் சென்றுள்ளார். முன்னதாக அவர் வெளியிட்ட பதிவில், ‘ஆம் ஆத்மி கட்சியை விட்டு வெளியேறி நான் பாஜகவில் சேருமாறு எனக்கு அழைப்பு செய்தி வந்துள்ளது.
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் வழக்குகள் அனைத்தும் முடிக்கப்படும். பாஜகவுக்கு எனது பதில் என்னவென்றால், நான் ராஜபுத்திர மஹாராணா பிரதாப்பின் வழித்தோன்றல். எனவே நான் ஊழல்வாதிகள் மற்றும் சதிகாரர்கள் முன்பாக தலைகுனிய மாட்டேன். என் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் பொய்யானவை. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதனை செய்யுங்கள். குஜராத் மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்புகிறார்கள். குஜராத்தில் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்காக பாஜக எதுவும் செய்யவில்லை’ என்றார்.