தில்லைநகர் : திருச்சி காவிரி ஆற்றில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் கும்மாளம் இடுவதை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் பெய்த கனமழையால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் உபரி நீர் 1.40 லட்சம் கனஅடி நீரையும் காவிரியில் திறந்து விடப்பட்டதால், முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் 30 கனஅடியும், கொள்ளிடத்தில் 85 கனஅடியும் பகிர்ந்து திருப்பி விடப்பட்டது. மிகவும் கலங்கலாக வந்த தண்ணீர் கொள்ளிடத்தில் இருந்து நேராக பூம்புகார் கடலுக்கும், காவிரியில் சென்ற நீர் கடைமடையை நோக்கி விவசாய பணிகளுக்கும் சென்றது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர்.
தற்போது தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்து கொள்ளிடத்தில் தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டது. காவிரியில் மட்டும் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திருச்சி காவேரி ஆற்றில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடும் நீரில் ஆபத்தை உணராமல் சுமார் 8 முதல் 10 வயது உடைய சிறுவர்கள் சிந்தாமணி ஓடத்துறை அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தின் மேலிருந்து ஆற்றின் நடுவே குதித்து கும்மாளமிடுகின்றனர். அவர்கள் பாதுகாப்புக்காக தெர்மாகோல் அட்டைகளை பயன்படுத்துகின்றனர்.
இவர்கள் தண்டவாளத்தின் மேலே இருந்து குதித்து ஓயாமரி படித்துறைக்கு நீச்சல் அடித்துக் கொண்டே யார் முந்தி வருவது என்ற போட்டி வைத்து கொண்டு அய்யாளம்மன் படித்துறை வரை விளையாட்டாக ஆபத்தான முயற்சி மேற்கொள்கின்றனர்.
சுற்று வட்டார பகுதியில் உள்ள சிறுவர்கள் இந்த ஆபத்தான நீச்சல் விளையாட்டில் ஈடுபடுகின்றனர். தினந்தோறும் ஏதாவது ஒரு இடத்தில் காவிரியில் குளிக்க செல்கின்ற சிலர் நீரில் மாயமாகி செல்கின்றனர். எனவே சிறுவர்களின் இந்த விளையாட்டான செயலை போலீசார் கண்காணித்து இதுபோன்ற ஆபத்தான விளையாட்டை மேற்கொள்ளக்கூடாது என்று எச்சரிக்க வேண்டும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.