புதுடெல்லி: தோல் கழலை நோய் 8 மாநிலங்களுக்கு பரவி உள்ளது. இந்த நோய்க்கு இதுவரை 7,300 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. தோல் கழலை நோய் (லம்பி ஸ்கின் டிசீஸ்) கால்நடைகளை குறிப்பாக பசு மாடுகளை தாக்குகிறது. போக்ஸ்விரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை வைரஸ் மூலம் பரவும் இந்நோய் தொற்றும் தன்மை கொண்டது. குறிப்பாக கொசு, ஈக்கள் மூலம் பரவும். இதன் அறிகுறியாக முதலில் காய்ச்சல் ஏற்படும்.
பின்னர் தோலின் மேற்புரத்தில சிறுசிறு கட்டிகள் உருவாகும். இந்த நோய் மரணத்தையும் ஏற்படுத்தும். இந்த நோய் முதன் முதலில் 1929-ம் ஆண்டு மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டது.
கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் வங்கதேசத்தில் இந்த நோய் கால்நடைகளை தாக்கியது. அதே ஆண்டில் மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு பரவியது.
இந்நிலையில், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், அந்தமான் நிக்கோபர் யூனியன் பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் இந்த நோய் பரவி உள்ளது. இந்த நோயால் பசு மாடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் பால் உற்பத்தி குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய கால்நடை பராமரிப்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது. நாடு முழுவதும் இதுவரை 1.85 லட்சம் கால்நடைகள் தோல் கழலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 7,300 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. அதிகபட்சமாக பஞ்சாபில் 3,359, ராஜஸ்தானில் 2,111, குஜராத்தில் 1,679 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. உயிரிழப்பு விகிதம் 1 முதல் 2 சதவீதமாக இருக்கிறது. அதேநேரம் மனிதர்களுக்கு இந்த நோய் பரவாது.
தோல் கழலை நோய் வேகமாக பரவி வருவதால், இதைக் கட்டுப்படுத்த கால்நடைகளுக்கு தடுப்பூசிபோடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதுவரை நாடு முழுவதும் 17.92 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள மாநிலங்களுக்கு, நிலைமையை ஆராய மத்திய குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் நோய் பாதித்த கால் நடைகளை தனிமைப்படுத்த வேண்டும், இந்த நோயால் உயிரிழந்த கால்நடைகளை பாதுகாப்பாக அடக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நோயால் பாதிக்கப் பட்ட கால்நடைகளின் உரிமை யாளர்களுக்கு உதவவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநில அரசுகள் இலவச தொலைபேசி கட்டுப்பாட்டு மையங்களை நிறுவி உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.