புதுச்சேரி: அரசின் மாதாந்திர உதவித்தொகை ஏதும் பெறாத 21 முதல் 55 வயதுக்குள் இருக்கும் ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று புதுச்சேரி பட்ஜெட்டில் மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை 9.45 மணிக்கு கூடியது. பேரவைத்தலைவர் செல்வம் திருக்குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். முதல் நிகழ்வாக நிதி பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முன்னிலைப்படுத்துவார் என பேரவைத் தலைவர் செல்வம் அறிவித்தார். இதையடுத்து முதல்வர் ரங்கசாமி 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள்:
> புதுச்சேரி ஆட்சிப் பரப்பானது நல்லாட்சி, அமைதி, நல்லிணக்கம், பொருளாதார முன்னேற்றம் ஆகிய இலக்குகளை நோக்கி உறுதியுடன் முன்னேறி வருகிறது. பிரதமர் மோடியின் நோக்கப்படி வணிகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா ஆகிய துறைகளில் பெஸ்ட் புதுவையாக மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
> கடுமையான நிதி நெருக்கடி இருந்த போதிலும், எனது அரசு பல நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 2021-22ம் நிதியாண்டில் நமது செலவினம் ரூ.9,793.29 கோடியாகும். இது திருத்திய மதிப்பீட்டின்படி 94.04 சதவீதமாகும். 2022-23ம் நிதியாண்டின் பட்ஜெட் மதிப்பீடு ரூ.10,696.61 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சொந்த வருவாய் ரூ.6,557.23 கோடியாகும். மத்திய அரசின் நிதியுதவி ரூ.1,729.77 கோடியாகும்.
மேலும் நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ.1,889.61 கோடியை கடன் மூலம் திரட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆட்சிப் பரப்பில் 31.3.2022 வரை மொத்த நிலுவைக்கடன் ரூ.9,859.20 கோடியாகும். அரசின் நிதி ஒதுக்கீட்டில் பெரும்பகுதி சம்பளம், ஓய்வூதியம், கடன், வட்டி செலுத்த செலவிடப்படுகிறது.
> அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும்.
> 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
> 21 வயதுக்கு மேல் 55 வயதிற்குள் இருக்கும் அரசின் எந்தவித மாதாந்திர உதவித்தொகையும் பெறாத வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும்.
> வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் – பிரதான் மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா என்ற மருத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவ சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு இத்திட்டமானது தகுதி வாய்ந்த வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு நீட்டிக்கப்படும்.
> வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்துக்கு கிடைக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உட்பட அனைத்து 1949 சிகிச்சை தொகுப்புகளும் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு இந்த ஆண்டு முதல் வழங்கப்படும்.
> நிலுவையில் உள்ள ஓய்வூதிய விண்ணப்பங்கள் அனைத்துக்கும் வரும் மாதங்களில் ஓய்வூதியம் வழங்கப்படும். மாற்று திறனாளிகளுக்கு மாதாந்திர பயணப்படி ரூ.100-ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்படும்.
> மாற்றுத்திறனாளி, மாற்றுத்திறனாளி அல்லாதவரை திருமணம் செய்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூபாய் ஒரு லட்சமாக உயர்த்தப்படும்.
> மாற்றுத்திறனாளி, மற்றொரு மாற்றுத்திறனாளியை திருமணம் செய்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்.
> தொடர் நோயால் பாதிக்கப்பட்ட 18 வயது பூர்த்தியடைந்த ஆதிதிராவிட, பழங்குடியினருக்கு மருத்துவ செலவுக்காக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் குறைந்தபட்ச வயது வரம்பை நீக்கி, அனைத்து வயதினருக்கும் நிதியுதவி வழங்கப்படும். அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் 10 ஆண்டு பணி புரிந்தவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள்.
> புதுச்சேரி காவல்துறையை வலுப்படுத்தும் பொருட்டு இந்த ஆண்டு ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு உருவாக்கப்படும். மேலும் ரூ.5.50 கோடி செலவில் 2 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், ஒரு ஜாமர் வாகனம் வாங்கப்படும். அனைத்து காவல்நிலையங்களிலும் மகளிர் உதவி மையங்கள் அமைக்கப்படும்.
> புதிதாக தேர்வு செய்யப்பட்ட 390 காவலர்கள் ஓராண்டு அடிப்படை பயிற்சியில் உள்ளனர். மேலும் 48 சப்இன்ஸ்பெக்டர்கள், 307 காவலர்கள், 415 ஊர்க்காவல்படையினர், 200 கடலோர ஊர்க்காவல்படையினர், 35 டிரைவர், 34 சமையல் கலைஞர்கள், 5 பட்லர்கள் என மொத்தம் ஆயிரத்து 44 பணியிடங்கள் நேரடி தேர்வின் மூலம் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.