புதுச்சேரி மாநிலத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டினை, நிதித்துறை பொறுப்பினை வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி இன்று சட்ட பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த 10 தேதியே பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், மத்திய அரசு பட்ஜெட்டிற்கு அனுமதி அளிக்காததால் காலவரையின்றி பேரவை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் நீண்ட இழுபறி நிலைக்கு மத்தியில் , மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. ஒப்புதலுக்கு பிறகு இன்று காலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் துறை வாரியாக பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார்.
புதுச்சேரி – கோவா.. யாரு பெஸ்ட்..? புதுச்சேரி முக்கியப பட்ஜெட் அறிவிப்புகள்..!
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000
இதில் சில அறிவிப்புகள் புதுச்சேரி மக்களிடத்தில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளன. குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் என்ற் அறிவிப்பு வெளியானது. இது குடும்ப தலைவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதன் மூலம் பெண்கள் குறைந்தபட்சம் வாழ்வாதாரங்களை பெற முடியும் என நம்பப்படுகிறது. எனினும் இந்த உதவித் தொகையானது 21 வயது முதல் 57 வயதுக்குட்பட்ட அனைத்து குடும்ப தலைவிகளுக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி & சுற்றுலா துறை
கல்வி மற்றும் சுற்றுலா துறைகளில் புதுச்சேரியினை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. கடுமையான சவால்கள் நிலவி வந்தாலும், பல நல திட்டங்களை புதுச்சேரி அரசாங்கம் செயல்படுத்தி வருவதாக புதுச்சேரி முதலைமைச்சர் தெரிவித்துள்ளார்.
கல்வித் துறைக்கு என்ன?
குறிப்பாக பள்ளிக்கல்வித்துறைக்கு 802 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மேன்மைபடுத்தப்பட்ட வசதிகளுடன் கூட வகுப்புகள், இலவச பாடப்புத்தகங்கள், சீருடை, மதிய உணவு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது.
புதுச்சேரியில் தேசிய சட்ட பல்கலை கழகம் துவங்கப்பட உள்ளது. இதற்கான துவங்க விழாவில் பிரதமர் பங்கேற்க உள்ளார்.
மாணவர்களுக்கு லேப்டாப்
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 9ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு நிறுத்தப்பட்ட சைக்கிள்கள் மீண்டும் வழங்கப்படும்.
விவசாய துறை & கால் நடை
விவசாயிகளின் நலன் கருதி எளிதில் விவசாயிகள் தேவையான உரங்களை பெற, காரைக்காலில் விற்பனை மையங்கள் அதிகரிக்கப்படும், கூட்டுறவு சர்க்கரை ஆலை தனியார் பங்களிப்புடன் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே கால் நடைகளின் சுகாதாரத்திற்காக மாநிலத்தில் நடமாடும் கால்நடை மையம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொடக்கங்கள்
காரைக்காலில் ஒரு மருத்துவ கல்லூரி துவங்கப்படும், புதிதாக 4 சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.
இது தவிர புதுச்சேரியில் தேசிய சட்ட பல்கலைக் கழகம் தொடங்கப்படவுள்ளது. இதற்கான தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்றும் முதலமைச்சர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
கடல் சார் அறிவிப்புகள்
புதுச்சேரி கடற்பகுதியில் மிதக்கும் படக்குதுறை அமைக்கப்படும். சென்னை புதுச்சேரி இடையில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள், சரக்கு கப்பல் சேவையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் புதுச்சேரி கடற்கரைக்கு இனப்பெருக்கம் செய்ய வரும் அரிய வகை ஆலீவ் ரெட்லி ஆமைகளை பாதுகாக்க, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 5 முட்டை பொறிப்பகம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடன் வாழ் உயிரினங்களை பாதுகாக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் மயமாக்கல்
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களில் உள்ள சொத்துக்களின் விவரங்கள் மற்றும் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பாதுகாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கோயில் சொத்துகளை பராமரிக்க முடியும். மோசடிகளை தவிர்க்க முடியும் என நம்பப்படுகிறது.
நிதி திரட்ட அனுமதி
மத்திய அரசு உதவி தொகையாக 1,729 கோடி ரூபாய் வழங்க உள்ளது. மத்திய அரசின் சாலை நிதியாக 20 கோடி ரூபாயும், மத்திய அரசின் கடன் தொகையாக 500 கோடி ரூபாய் நிதியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர புதுச்சேரி அரசு 1,889 கோடி ரூபாய் கடன் திரட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மற்ற முக்கிய அறிவிப்புகள்
மின்சார துறைக்கு 1,596 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த துறைக்கு ரூபாய் 31.05 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக 2 கோடி ரூபாய் வழங்கப்படும்.
காவல் துறையினை ஊக்குவிக்கும் விதமாக காவல் துறையில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு துவங்கப்படும்.
அனைத்து காவல் நிலையங்களில் மகளிர் உதவி மையம் துவங்கப்படும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
பாரதியார் பல்கலைக்கூடத்தில் 16.18 கோடி ரூபாய் மதிப்பிலான தாகூர் கலை பண்பாட்டு வளாகம் நடப்பாண்டில் கட்டி முடிக்கப்படும். மேலும் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு நூலகங்கள், அரசு கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Puducherry Budget 2022-2023: What are the major announcements made by Chief Minister Rangasamy?
Puducherry Budget 2022-23, Rangasamy, Puducherry Budget, புதுச்சேரி பட்ஜெட், புதுச்சேரி பட்ஜெட் 2022-23, ரங்கசாமி/புதுச்சேரி பட்ஜெட் 2022-23.. சாமானியர்களுக்கு பயனுள்ள 5 முக்கிய அறிவிப்புகள்!