பாலிவுட்டின் பிரபல ஹீரோக்களில் ஒருவரும், நடிகை தீபிகா படுகோனேவின் கணவருமான ரன்வீர் சிங் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அவரது ஆடை குறித்த பேச்சு எப்போதும் எழும். வித்தியாசமாக, விதவிதமான நிறங்களில் அவர் அணிந்துவரும் உடைகளுக்கென்றே தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அதேசமயம் அவர் அணியும் ஆடைகள் சமயத்தில் கிண்டல்களையும் சந்திப்பதுண்டு. ஆனால் ரன்வீர் தனக்கு தோன்றியபடி உடைகள் உடுத்துவதை நிறுத்தவில்லை.
சூழல் இப்படி இருக்க சமீபத்தில் ஆடையில்லாமல் நிர்வாணமாக ஒரு அட்டைப்பட போஸ் கொடுத்தார் ரன்வீர் சிங். இதுவரை உடைகளால் கிண்டல் செய்யப்பட்ட ரன்வீர் தற்போது உடை இல்லாமல் இருந்ததால் அவர் மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டன. இருப்பினும் அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதனை கொண்டாடி ரன்வீருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ரன்வீர் நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்கள் எந்த அளவு வைரலானதோ அதே அளவு சர்ச்சையையும் சந்தித்தது. பலரும் அந்தப் புகைப்படங்களுக்கு தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்தனர். அதுமட்டுமின்றி இதேபோல் ஒரு நடிகை போஸ் கொடுத்தால் அனைவரும் அமைதியாக இருந்துவிடுவார்களா எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்தச் சூழலில், நடிகர் ரன்வீர் சிங் மீது தன்னார்வ அமைப்பு சார்பில் மும்பை செம்பூர் காவல் நிலையத்தில் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில், ரன்வீர் சிங் நிர்வாண படங்கள் மூலம் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி, அவர்களை அவமதித்துவிட்டதாக கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ரன்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக செம்பூர் காவல் துறையினர் கடந்த 12ஆம் தேதி ரன்வீர் சிங் வீட்டுக்கு சென்று நோட்டீஸ் கொடுத்தனர். அந்த நோட்டீசில் 22ஆம் தேதி (இன்று) நடிகர் ரன்வீர் சிங் நிர்வாண படம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு கூறப்பட்டிருந்தது. ஆனால் ரன்வீர் சிங் இன்று ஆஜராகவில்லை. மேலும், விசாரணைக்கு ஆஜராக கூடுதல் அவகாசம் அவர் கேட்டிருப்பதாகவும் காவல் துறை வட்டாரம் தெரிவிக்கிறது.