ரஜினியிடம் ஆசிர்வாதம் பெற்று தான் பாஜகவில் மீண்டும் இணைந்துள்ளதாக அர்ஜுன மூர்த்தி பேட்டியளித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், பாஜகவில் மீண்டும் அர்ஜுன மூர்த்தி இணைத்து கொண்டார். இவர், நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பிக்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டவர். அதற்காக பாஜகவிலிருந்து விலகி ரஜினிகாந்த் தொடங்க இருந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். ரஜினிகாந்த் கட்சி தொடங்காததால் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியை இவர் தொடங்கினார். எல்.முருகன் பாஜக மாநில தலைவராக இருந்தபோது பாஜக அறிவு சார் பிரிவு மாநில தலைவராக இருந்தவர் அர்ஜுன மூர்த்தி.
இந்நிலையில், மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். பாஜகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பாஜக சிறப்பான அந்தஸ்தை பெற உழைப்பேன் என்று கூறினார். பதவி, அந்தஸ்துக்காக பாஜகவில் சேரவில்லை என்று கூறிய அவர், ஆன்மீக அரசியல் தொடர்பான ரஜினியுடன், ஒருமித்த அரசியல் கருத்து இருந்ததால் நான் இணைந்திருந்தேன் என்றும் தெரிவித்தார்.
இப்போது ரஜினியின் ஆசிர்வாதத்துடன்தான் பாஜகவில் மீண்டும் இணைந்துள்ளேன் என்று கூறிய அவர், விவேகம், வீரியமிக்கராக அண்ணாமலை இருக்கிறார் என்றார். ரஜினியிடம் தெளிவான சிந்தனை, தொலைநோக்குப் பார்வை இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். ரஜினி ஒரு கருத்தை கூற நினைத்தால் அதை வெளிப்படையாக கூறிவிடுவார் எனவும், ரஜினி உட்பட அனைத்து இந்திய குடிமகனுக்கும் அரசியல் என்பது அடிப்படை உரிமை என்றும் அர்ஜுன மூர்த்தி கூறியுள்ளார். அதை எப்பொழுது வேண்டுமானாலும் வெளிப்படுத்த முடியும் எனவும், தொலைநோக்கு பார்வை இல்லாத அரசாக திமுக அரசு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.