டெல்லியில் மதுபானங்கள் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடு என குற்றம் சாட்டப்பட்ட நிலையில், மணீஷ் சிசோடியா ஒரு டிவிட்டர் பதிவை பதிவிட்டுள்ளார்.
தலைநகர் டெல்லியில் அண்மையில் மதுபானங்கள் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. டெல்லி அரசுக்கு இதனால் நஷ்டம் ஏற்பட்டது என புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து தனது விசாரணையை தொடங்கியது.
முதல் கட்டமாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டது. மேலும் இந்த விவகாரத்தில் மணீஷ் சிசோடியா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் நோட்டீஸ் அண்மையில் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து டிவிட்டரில் பதிவொன்றை சிசோடியா வெளியிட்டுள்ளார். அதில் ஆம் ஆத்மி கட்சியை உடைத்துவிட்டு பாரதிய ஜனதாவில் சேருமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அவ்வாறு செய்தால் வழக்குகளிலிருந்து தப்பிக்கலாம் என பேரம் பேசப்பட்டதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், தான் ஒரு ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவர் என குறிப்பிட்டுள்ள மணீஷ் சிசோடியா, தனது தலையை வெட்டிக்கொள்வேனேதவிர, சதிகாரர்கள் முன் தலைவணங்க மாட்டேன் என ஆவேசமாக தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்களோ அதனை செய்யுங்கள் என பாஜகவுக்கு மணீஷ் சிசோடியா சவால் விடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மணீஷ் சிசோடியா, “அவர்கள் என்னை பாஜகவின் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள். நான் மறுத்துவிட்டேன். அரவிந்த் கெஜ்ரிவால் என்னுடைய குரு. அவர் எனது வழிகாட்டி. முதலமைச்சர் ஆவதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே நான் அரசியலுக்கு வந்தேன். இதுதான் பாஜகவுக்கு எனது பதில். கெஜ்ரிவால் சிறப்பாக பணியாற்றுவதை தடுக்கவே இந்த சோதனைகள் எல்லாம் நடைபெறுகிறது. அவர்கள் எனக்கு இரண்டு ஆஃபர் கொடுத்தார்கள். ஒன்று ஆம் ஆத்மி கட்சியை உடைத்தால் அனைத்து வழக்குகளும் கைவிடப்படும். பின்னர் நீங்கள் முதலமைச்சர் ஆக்கப்படுவீர்கள் என்றார்கள்.” என்றார்.
இது ஒரு புறம் இருக்க முதல்வர் கெஜ்ரிவால், “டெல்லியின் கல்வி அமைப்பை மேம்படுத்தியதற்காக மணீஷ் சிசோடியா போன்ற ஒருவருக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டும். ஒட்டுமொத்த கல்வி அமைப்பின் பொறுப்பையும் அவரிடம் வழங்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக அவருக்கு எதிராக சிபிஐ சோதனை பாய்கிறது” மணீஷ் சிசோடியாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM