சாலையில் உள்ள பள்ளங்களால் ஆண்டுக்கு சராசரியாக 2,300 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் விரைவான போக்குவரத்துக்காக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டபோதிலும் விபத்துகளும் தொடர்ச்சியாக அதிகரிப்பது மக்கள் மத்தியில் கவலையை அதிகரித்துள்ளது. இந்நிலையில் 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான சாலை விபத்துகள் குறித்த புள்ளி விவரங்களை மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில் சாலையில் உள்ள பள்ளங்களால் ஏற்படும் விபத்துகளில் ஆண்டுக்கு சராசரியாக 2,300 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வழக்கு ஒன்றை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டால் அதற்கு என்ன காரணம்? யார் காரணம்? என்ற விவரங்களை மாவட்ட ஆட்சியர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்களின் விளக்கத்தின் அடிப்படையில், தவறு செய்தவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என கேரள உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டு வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், சாலை பராமரிப்பில் அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்படுவதாக கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM