கொழும்பு: சீனாவின் உளவு கப்பலான ‘யுவான் வாங் 5’ இலங்கை துறைமுகத்தில் இருந்து வெளியேறியது.
சீனாவின் ஜியாங்யின் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட யுவான் வாங் 5 என்ற உளவு கப்பல் தைவானை கடந்து இந்தியப் பெருங்கடலில் பயணித்து ஆகஸ்ட் 11-ஆம் தேதி இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தது. சீனாவின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான ‘யுவான் வாங் 5’ ஒரு வாரத்திற்கும் மேலாக துறைமுகத்திலே நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்த சீன உளவு கப்பலின் வருகை, இந்தியாவின், குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் தலைவர்கள் தெரிவித்தனர்.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கவலையும் தெரிவித்தது. எனினும் இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன கப்பல் தொடர்ந்து துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தனது பணியை முடித்துவிட்டு ‘யுவான் வாங் 5’ கப்பல் மீண்டும் இன்று இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து தங்கள் நாட்டுக்கு புறப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
சீன உளவு கப்பல் துறைமுகத்தில் இருந்து மாலை 4 மணிக்கு வெளியேறியதாக துறைமுக நிர்வாக அதிகாரி நிர்மல் சில்வாவும் உறுதிப்படுத்தி இருக்கிறார். ‘யுவான் வாங் 5’ உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தில் இருந்து வெளியேறியதன் மூலம் இந்தியப் பெருங்கடலில் நிலவிய பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது.