புதுடெல்லி: கோதுமையின் உற்பத்தி பாதிப்பு, இருப்பு சரிவு, விலை உயர்வு எதிரொலியால் வெளிநாட்டில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை ஒன்றிய அரசு மறுத்துள்ளது. உலகின் மிகப்பெரிய கோதுமை உற்பத்தியாளர்களாக இந்தியா இருந்தும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவோ வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ரஷ்யா – உக்ரைன் போரின் விளைவாக, உணவு பற்றாக்குறை நெருக்கடியை பல நாடுகள் சந்தித்து வருகின்றன. அதனால் கடந்த மே 13ம் தேதி கோதுமை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. கடந்த மார்ச் மாதம் பெய்த மழையால் கோதுமை பயிர் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரியில், 111 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி செய்யப்படும் என்று மதிப்பப்பட்டது. ஆனால் 102 மில்லியன் டன்களுக்கு மேல் கோதுமை உற்பத்தியாக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. வெப்பச் சலனம் காரணமாக கோதுமை உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும், அதனால் கோதுமை இருப்பு குறைந்துள்ளதாகவும், கோதுமை விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதனால் வெளிநாட்டில் இருந்து கோதுமை இறக்குமதி செய்ய வேண்டிய அவசர நிலைக்கு ஒன்றிய அரசு தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. கோதுமை கையிருப்பு விஷயத்தில் ஒன்றிய அரசு மெத்தனமாக செயல்பட்டதால், கோதுமை இறக்குமதிக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் கோதுமை இறக்குமதி செய்ய உள்ளதாக வெளியான செய்தியை ஒன்றிய அரசு மறுத்துள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய அளவிற்கு கோதுமை இருப்பு உள்ளது. கோதுமை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை. கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையால் விவசாயிகளுக்கு கிடைக்கும் வருமானத்தில் எந்தவித பாதகமான தாக்கமும் ஏற்படவில்லை. ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்ட பிறகும் கூட, உள்நாட்டு சந்தையில் கோதுமையின் விலை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் (எம்எஸ்பி) அதிகமாகவே உள்ளது. இந்திய உணவுக் கழகம் பொது விநியோகத்திற்கான போதுமான இருப்பையும் கொண்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உள்நாட்டில் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதன் விலையும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.