கைத்தேர்ந்த பாம்பு பிடி வீரராக இருந்தவர்கள் பிடிபட்ட பாம்புகளால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது வாடிக்கையாக கேள்விப்படும் செய்தியாகவே இருக்கிறது. அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 55 வயதான விவசாயி ஒருவரும் பாம்பை பிடித்தபோது உயிரிழந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
தேவேந்திர மிஷ்ரா என்ற அந்த விவசாயி ஷாஜஹான்புர் அருகே உள்ள ஜெய்திபுர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் மருவாஜலா கிராமத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார். சுமார் 200 பாம்புகளை பிடித்துள்ள தேவேந்திர மிஷ்ரா ஜெய்திபுர் பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமானவரும் கூட. அந்த வகையில் கடந்த வெள்ளியன்று (ஆக.,19) ரவிந்திர குமார் என்பவரது வீட்டில் இருந்து கொடிய விஷம் கொண்ட பாம்பை பிடித்திருக்கிறார்.
பாம்பை கைப்பற்றியதோடு அதனை கழுத்தில் மாலையாக போட்டபடி கிராமத்தில் உலா வந்ததோடு 5 வயது பெண் குழந்தையின் கழுத்திலும் அந்த விஷம் கொண்ட பாம்பை மாட்டியிருக்கிறார். இதனையடுத்து பாம்புடன் உலா வருவதை வீடியோவும் எடுத்திருக்கிறார் தேவேந்திர மிஷ்ரா.
அப்போது தேவேந்திர மிஷ்ரா பிடிபட்ட பாம்பிடம் கடிபட்டிருக்கிறார். இதனையடுத்து மருத்துவமனைக்கு செல்லாமல் தனக்குத்தானே மூலிகைகளை கொண்டு வைத்தியமும் பார்த்திருக்கிறார்.
ஆனால் அவை எதுவும் கைகொடுக்கவில்லை. அதன்படி நேற்று முன் தினம் (ஆக.,20) அன்று இரவு தேவேந்திர மிஷ்ரா உயிரிழந்திருக்கிறார். அதேபோல தேவேந்திர மிஷ்ராவை கடித்த பாம்பும் இறந்திருக்கிறது.
இது தொடர்பாக பேசியுள்ள அப்பகுதியைச் சேர்ந்த செளபாக்யா கதியார் என்ற மருத்துவர், “பாம்பு கடிப்பட்டவர் முதலில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருந்தால் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கும்.” எனத் தெரிவித்திருக்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM