கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரூர் அருகேயுள்ள கீழ்குப்பம் கிராமத்தில் உள்ள மக்கள் மழை பெய்ய வேண்டியும் புரட்டாசி மதங்களில் முதல் வாரம் நெல் அறுவடையை துவங்குவதற்கு முன்னதாக விரதமிருந்து ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை திருப்பதி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு கீழ்குப்பம் கிராமத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஊரை காலி செய்து விட்டு பத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளில் திருப்பதிக்கு சென்றனர். இந்நிலையில் கீழ் குப்பம் கிராமம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும் வீட்டின் கதவுகளில் நாமம் மிட்டு கதவுகள் பூட்டப்பட்டு சென்றுள்ளனர். கிராமத்தில் உள்ள அனைவரும் திருப்பதிக்கு செல்வதால், தங்கள் கிராமத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என கிராம மக்கள் பாரூர் காவல் நிலையத்தில் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு பாதுகாப்பு வேண்டுமென மனு அளித்தனர். மனுவின் பேரில் பாரூர் போலீசார் கீழ்குப்பம் கிராமத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இரவு நேரங்களில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழை வேண்டி, ஒட்டுமொத்த கிராமமே ஊரை காலி செய்து திருப்பதிக்கு சென்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.