ஒடிசாவை சேர்ந்த மருத்துவக் குழு ஒன்று, ஆண் ஒருவர் குடலில் இருந்து ஸ்டீல் கிளாஸை அறுவை சிகிச்சை செய்து அகற்றி உள்ளது.
இவ்வளவு பெரிய கிளாஸை ஒருவர் விழுங்க வாய்ப்பில்லை. அப்படியெனில் அந்த கிளாஸ் அவரது வயிற்றுக்குள் எப்படி சென்று இருக்கும்? ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? இதை அவருக்கு செய்தவர்கள் வேறு யாருமில்லை, அவரின் நண்பர்களே.
45 வயதான க்ருஷ்ணா ரூட் என்பவர் குஜராத்தின் சூரத் நகரத்தில் பணிபுரிந்து வருகிறார். 10 நாள்களுக்கு முன்பு நண்பர்களோடு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் நன்றாகக் குடித்துள்ளார். இவரின் நண்பர்கள் மயக்கத்தில் இருந்த அவரை பிடித்து, அவர் ஆசனவாய் வழியாக ஸ்டீல் கிளாஸை உள்ளே செலுத்தி உள்ளனர். இது எதுவும் அறியாத அந்த நபர், அடுத்த நாள் முதல் மிகுந்த அடிவயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார்.
தாங்க முடியாத வலியால் சூரத்தை விட்டு, தன்னுடைய சொந்த கிராமமான கஞ்சமிற்கு விரைந்துள்ளார். தன்னுடைய கிராமத்தை அவர் அடைந்த போது, அவருடைய வயிறு வீங்கியதோடு, மலம் கழிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினரின் அறிவுரைப்படி, எம்.கே.சி.ஜி. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். அவருக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரேவில் அவரது குடலில் ஸ்டீல் கிளாஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மலக்குடல் வழியாகவே அதை வெளியேற்ற மருத்துவர்கள் முயற்சித்தனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அறுவை சிகிச்சையில், ஸ்டீல் கிளாஸ் அகற்றப்பட்டது. சிகிச்சை முடிந்த நிலையில், தற்போது அவர் தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.