சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுகின்ற மதுபாட்டில்களை திரும்ப பெறுகின்ற திட்டம் வகுக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. அத்துடன், சுற்று சூழலை பாதுகாக்கின்ற கடமை தமிழக அரசிற்கு இருக்கின்றது என குறிப்பிடப்பட்டிருந்தது.
நீலகிரி மாவட்டத்தில் ஏற்கனவே, இந்த திட்டத்தை செயல்படுத்தியதை நீதிமன்றம் சுட்டிகாட்டியது. அங்கே, 29 லட்சம் மதுபாட்டில்கள் விற்கப்பட்டு, இதன் மூலம் 18 லட்சம் மதுபாட்டில்கள் மீண்டும் பெறப்பட்டதாகவும் தெரிவித்து இதற்கான திட்டத்தை வகுக்க வேண்டுமென டாஸ்மாக் நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இத்தகைய சூழலில், இந்த திட்டத்தை தமிழகம் முழுதும் செயல்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் இருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீலகிரி பகுதிகளில் 7 அல்லது 8 கடைகள் மட்டுமே இருக்கிறது. எனவே, இதை அங்கே அமல்படுத்துவது எளிது. இருப்பினும், இதை மாநிலம் முழுதும் அமல்படுத்துவது மிகக்கடினம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்த சிரமங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டுமென நீதிமன்றத்துக்கு உதவியாக இருக்கும் வக்கீல்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.