கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ரதி மேனனுக்கு வயது 59. அவரின் கணவர் கடந்தாண்டு உயிரிழந்துவிட்டார். மகள்கள் இருவரும் திருமணமாகி தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இதுபோன்ற சூழ்நிலையில், பெரும்பாலும் அம்மாக்கள் தங்கள் மிச்ச ஆயுளை தனிமையில் கழிக்கத் தள்ளப்பட்டிருப்பார்கள்.
ஆனால் ரதியின் மகள் பிரசீதா தன் தாயை அப்படி விட்டுவிடவில்லை. ‘வயது வெறும் எண்ணிக்கைதான். வாழ்வின் மீதி நாள்களுக்கு அம்மாவுக்கு துணை தேவை’ என்று எண்ணினார். தன் அம்மாவுக்கு, குடும்பத்தின் உதவியுடன் மறுமணம் செய்து வைத்துள்ளார்.
இதுகுறித்து பிரசீதா கூறுகையில், “அம்மா, நான், என் சகோதரி நண்பர்களை போலத்தான் வளர்ந்தோம். எந்த விஷயமாக இருந்தாலும் பகிர்ந்து கொள்வோம். எங்களுக்குள் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. நான் ஆசிரியராக பணிசெய்து வருகிறேன். அப்பாவுக்கு இதயப் பிரச்னை இருந்தது. 2021-ம் ஆண்டு அவர் இறந்துவிட்டார். அது கொரோனா ஊரடங்கு காலகட்டம். அப்போது நான் அம்மாவுடன் தான் இருந்தேன். அப்பா இறந்த இரண்டு மாதங்களில் அம்மாவின் 58வது பிறந்தநாள் வந்தது.
அப்போது அம்மாவுடன் நான், என் மகன் மட்டும்தான் இருந்தோம். அம்மா இனி தனியாகத்தான் இருக்க வேண்டுமோ என அப்போதே என் மனதில் நிறைய யோசனைகள் வந்தன. அம்மாவுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என முடிவு செய்தேன். அதை அம்மாவிடம் சொல்லவில்லை.
பிறகு பள்ளிகள் திறந்தவுடன், பணிக்காக நான் பாலக்காட்டில் உள்ள கணவர் வீட்டுக்கு வந்துவிட்டேன். அடுத்தடுத்த பணிச்சுமையால் அம்மாவுடன் பேச போதிய நேரம் கிடைக்கவில்லை. இதற்கு நடுவே அம்மாவுக்கு செரிமானத்தில் பிரச்னை ஏற்பட்டது. திருச்சூரில் அது சம்பந்தமாக அனைத்து மருத்துவர்களையும் பார்த்துவிட்டார்.
அப்போதுதான் அம்மாவுக்கு மன அழுத்தம் அதிகம் இருப்பதால், இந்தப் பிரச்னைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறினர். எங்கள் வீட்டுக்கு அழைத்தேன். ஒரு கட்டத்தில் அம்மா, ‘யாருக்கும் தொந்தரவளிக்க விருப்பம் இல்லை. ஏதாவது முதியோர் இல்லத்துக்குச் சென்றுவிடுகிறேன்’ எனக் கூறினார்.
பொதுவாகவே, கடைசி காலத்தில் பெற்றோர்கள் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்படுவதை விரும்பாதவள் நான். அம்மாவும், அப்பாவும் நாங்கள் பிறந்ததிலிருந்து எங்களுக்காகவே வாழ்ந்து, எங்களை சிறப்பாக வளர்த்து இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். வயதானபோது அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை எனக்கிருக்கிறது.
58 வயதில் இருந்து, இன்னும் எத்தனை பிரச்னைகளை அவர் தனியாக எதிர்கொள்ள வேண்டும் என யோசித்துப் பார்த்தபோது, கவலையாக இருந்தது. அம்மாவின் மறுமணம் குறித்து என் கணவரிடம் பேசினேன். அவரும் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். முதலில் அம்மா மறுமணத்துக்கு மறுத்துவிட்டார்.
`அது மிகவும் தவறான முடிவாக போய்விடும்’ என்று சொன்னார். என் கணவர்தான் அம்மாவை சம்மதிக்க வைத்தார். தெரியாத நபரை மறுமணம் செய்தால் தான் பிரச்னை. நன்கு தெரிந்த ஒருவரை மறுமணம் செய்தால் எந்தப் பிரச்னையும் இல்லை என்று கூறினோம். அம்மாவை மறுமணம் செய்துள்ள திவாகர், எங்கள் தூரத்து உறவினர்.
அவர்களும் மேட்ரோமானியில் பதிவு செய்திருந்தனர். இரு வீட்டாரும் பேசினோம். அவர்களைப் பற்றி எங்களுக்கு ஓரளவுக்கு தெரியும். இருந்தாலும் திவாகரை அம்மா முன்பு பார்த்ததில்லை. அம்மாவும், திவாகரும் போனில் பேசினர்.
அதன் பிறகுதான் அம்மா முழு சம்மதம் தெரிவித்தார். பொதுவாக கடைசி காலத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு, சம்பளம் வாங்காத பணியாளராகத்தான் வாழ்வை கடக்கின்றனர். அவர்களுக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்வு இருக்கிறது. நாம் வளர்ந்தவுடன், அவர்களது தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. வயது வெறும் எண்ணிக்கை தான்.
நாம் யாராக இருந்தாலும், ஒருவர் தனக்கு துணை வேண்டும் என நினைக்கும்போது அதை மறுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. குறிப்பிட்ட வயதுக்கு மேல் மறுமணம் செய்யக் கூடாது என நமது எந்தச் சட்டமும் கூறவில்லை. வாழ்க்கைத் துணையை பெறுவது அவரவர் உரிமை.
வாழ்க்கைத் துணையை இழக்கும்போது சிலர் மறுமணத்தில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். அதுவே சம்பந்தப்பட்ட நபர் தனக்கு துணை வேண்டும் என நினைத்தால் குடும்பம் அவருக்கு உறுதுணையாக நிற்க வேண்டும். அப்படி செய்தாலே அது முதியோர் இல்லங்களை ஒழித்துவிடும். இதை நான் மட்டும் செய்யவில்லை.
என் கணவர், சகோதரி, உறவினர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் என்று எல்லோரின் முயற்சி தான் இதை சாத்தியமாக்கியுள்ளது. இருவரும் தங்களது புதிய வாழ்வில் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை” என்றார்.
இதுகுறித்து ரதிமேனன் கூறுகையில், “என் மனதில் வேதனை இருந்தது உண்மைதான். மறுமணம் என்றவுடன் எனக்கு பயம் தான் வந்தது. புதிய வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ற எண்ணம் இருந்தது. அதனால் முதியோர் இல்லத்துக்கு சென்றுவிடலாம் என்றிருந்தேன்.
குடும்பத்தினர் துணையாக இருந்ததால் ஒப்புக் கொண்டேன். மகள் கையால் மறுமணம் செய்ததில் மிக்க மகிழ்ச்சி. இதேபோல, துணையை இழந்தவர்கள் மறுமணம் செய்ய அவர்கள் குடும்பம் ஆதரவாக இருந்தால், பலரின் தனிமை இந்த உலகத்தில் இருந்து விலகும்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.