சித்தூர் 6வது வார்டில் 24 மணி நேரமும் இலவச குடிநீர் வழங்க நடவடிக்கை-குறைகேட்பு நிகழ்ச்சியில் எம்எல்ஏ உறுதி

சித்தூர் : சித்தூர் 6வது வார்டில் 24 மணிநேரமும் இலவச குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீடு வீடாக சென்று குறைகேட்பு நிகழ்ச்சியில் எம்எல்ஏ உறுதியளித்தார்.
சித்தூர் 6வது வார்டு வெங்கல் ராவ் காலனி பகுதியில் எம்எல்ஏ ஜங்காளபள்ளி சீனிவாசலு நேற்று வீடு வீடாக சென்று  பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது, அவர் பேசியதாவது: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன்முதல் அமைச்சராக பொறுப்பேற்று மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த மூன்று வருடங்களில் ஆந்திர மாநில மக்களுக்கு ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அரசு என்னென்ன நலத்திட்ட உதவிகளை செய்துள்ளது.

என்னென்ன நலதிட்ட உதவிகள் செய்யப் போகிறது என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். மேலும் பொது மக்களுக்கு ஏதாவது குறைகள் இருந்தால் உடனடியாக தீர்த்து வைக்க அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சித்தூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் அனைத்து கிராமங்களில் சென்று வீடு வீடாக சென்று பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்து வருகிறோம்.

ஏராளமான பொதுமக்கள் குடிநீர் வசதி இல்லை என்றும், சாலை வசதி இல்லை என்றும், முதியோர் உதவித்தொகை இல்லை என்றும், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்றும், ரேஷன் கார்டு வழங்க வேண்டும் புகார் மனுக்கள் வழங்கினர். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வர் ஜெகன் மோகன் மூன்று ஆண்டு கால ஆட்சியில் நவரத்தினா என்கிற திட்டத்தின் மூலம் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் நிறைவேற்றியுள்ளார்.

மாநிலம் முழுவதும் 25 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் புதிதாக ஏராளமானோர் முதியோர் உதவித்தொகை வேண்டும். ரேஷன் கார்டு, இலவச வீட்டுமனை பட்டா வேண்டும் என்றும் மனுக்கள் வழங்கியுள்ளார்கள். அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து மனுதாரர்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து அரசிடமிருந்து வழங்க வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்க வேண்டுமென்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் சாலை வசதி இல்லாமலும், கழிவுநீர் வசதி இல்லாமலும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

அந்த பகுதியில் ஒரு மாதத்திற்குள் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் செய்யப்படும். அதேபோல் இப்பகுதியில் குடிநீர் பிரச்சினை இருப்பதாக தெரிவித்துள்ளனர். இப்பகுதி மேடான பகுதியாக இருப்பதால் மாநகராட்சி சார்பில் டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் மிக விரைவில் குடிநீர் குழாய் பொருத்தி இப்பகுதி மக்களுக்கு 24 மணி நேரமும் இலவச குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாநகராட்சி மேயர் அமுதா, துணை மேயர் சந்திரசேகர், மார்க்கெட் கமிட்டி சேர்மன் கிருஷ்ணா ரெட்டி உள்பட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஏராளமான கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.