திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் கூலூர் ஊராட்சிக்குட்பட்ட மாவூர் கிராமம் உள்ளது. இதில் ஏற்கனவே கட்டப்பட்டிருந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பழுதடைந்துவிட்டது. இதனால் அந்த பள்ளிக் கட்டிடத்தை அப்புறப்படுத்தி புதிய பள்ளி கட்டிடம் கட்ட திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த பள்ளிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மீனா உமாபதி தலைமை தாங்கினார். முன்னதாக தலைமையாசிரியர் முருகன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக திருவலாங்காடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கூலூர் எம்.ராஜேந்திரன் கலந்துகொண்டு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் திமுக பிரமுகர்கள், மாவட்ட பிரதிநிதி பூக்கடை கோபி, நாபலூர் குமார், காஞ்சிப்பாடி, யுவராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.