ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தில் செயல்படும் பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியராக அனில்குமார் திரியா என்பவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த சனிக்கிழமை காலை சுமார் 11 மணிக்கு கல்லூரிக்குள் நுழைந்த அவரது மனைவி அனில்குமாரின் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து தனது செருப்பை கழற்றி அனில்குமாரை சரமாரியாக அடித்தார். அப்போது, (பஹுத் அச்சா காம் கர் ரஹே ஹை) நீங்க பெரிய வேலை செய்கிறீர்கள் என்ற நினைப்போ? என்று கூறியவாறு தலை, முதுகு,கால் பகுதிகளில் தொடர்ந்து தாக்கினார்.
அப்போது அறைக்கு வெளியே நின்றிருந்த சக பேராசிரியர்கள் கதவை திறக்கும்படி வறுபுறுத்தியும் அந்த பெண் அனில்குமாரை தொடர்ந்து தாக்கினார். அதில் சிலர் இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்துள்ளனர். பின்னர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிலர் அளித்த தகவலின் பேரில் அங்கு ஓடி வந்த பாதுகாவலர்கள் பேராசிரியர் அனில்குமாரை மீட்டனர்.
சம்பவம் குறித்து அனில்குமார் காவல் நிலையத்தில் புகார் ஏதும் அளிக்கவில்லை. ஆனாலும், குடும்ப பிரச்சனை காரணமாகவே அனில்குமாரை அவமானப்படுத்தும் நோக்கில் அவரது மனைவி இவ்வாறு நடந்துக்கொண்டது தெரியவந்துள்ளது.
கல்லூரி வளாகத்தில் வைத்து தன்னை அவனப்படுத்திய மனைவியை ஒருமுறை கூட திருப்பித் தாக்காத அனில்குமாருக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், அவரது மனைவியின் செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.