சென்னை: பொதுவாக சினிமா துறையில் இருப்பவர்கள் அதில் இருக்கும் ஒரே துறையை மட்டும் நம்யிருக்க மாட்டார்கள்.
இயக்குநர்கள் நடிக்க செய்வார்கள், நடிப்பவர்கள் இசையமைப்பார்கள், இசையமைப்பாளர்கள் படம் தயாரிப்பாளர்கள். இவ்வாறு வெவ்வேறு துறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருக்கும் சில நடிகைகள் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் இருக்கிறார்கள்.
சரிதா ரோகினி ரேவதி
அந்த வகையில் நடிகைகள் சரிதா, ராதிகா, ரேவதி, ரோகினி உள்ளிட்டோர் மற்ற நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துள்ளார்கள். உதாரணத்திற்கு முதல் மரியாதை திரைப்படத்தில் ராதாவிற்கும், கடலோரக் கவிதை படத்தில் ரஞ்சனிக்கும் நடிகை ராதிகாதான் டப்பிங் கொடுத்திருப்பார். மின்சார கனவு திரைப்படத்தில் கஜோலுக்கு ரேவதி டப்பிங் கொடுத்திருப்பார். வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் ஜோதிகாவிற்கு ரோகினி டப்பிங் கொடுத்திருப்பார்.
சரிதா
இயக்குநர் கே.பாலச்சந்தர் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகை சரிதா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று நான்கு மொழிகளில் நடித்தது மட்டுமின்றி நான்கு மொழிகளிலும் பிஸியான டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் இருந்துள்ளார். தமிழில் மட்டும் நடிகைகள் சிம்ரன், தபு, விஜயசாந்தி, ரோஜா, நக்மா, சௌந்தர்யா உள்ளிட்ட பலருக்கு டப்பிங் கொடுத்துள்ளார். தெலுங்கில் நடிகை ராதிகாவுக்கு டப்பிங் கொடுத்துள்ளார்.
சுரேஷ் சக்ரவர்த்தி
பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்தவர் சுரேஷ் சக்கரவர்த்தி. இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் கார்த்திக், நடிகை அமலா உள்பட பல நடிகர் நடிகைகளுக்கு மேனேஜராக பணிபுரிந்துள்ளா.ர் இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கியிருந்த அழகன் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பின்னர் தனியார் தொலைக்காட்சியில் இயக்குநராகவும் பணியாற்றிய சுரேஷ் சக்கரவர்த்தியை அனைவருக்கும் தெரிந்தது என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகத்தான்.
சரிதா ஒரு ராட்சசி
ஒருமுறை ஒரு படத்தின் டப்பிங் இன்சார்ஜாக சுரேஷ் சக்ரவர்த்தி பணியாற்றினாராம். அப்போது சரிதா தான் டப்பிங் பேச வந்துள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் சரிதா டப்பிங் பேசிவிட்டு இடைவேளைக்கு சென்றால் மீண்டும் ஐந்து அல்லது ஆறு நாட்கள் கழித்துதான் வருவார். அவரை வைத்து டப்பிங் செய்வது கஷ்டம் என்று பயமுறுத்தி இருக்கிறார்கள். அதே பயத்தில் சுரேஷ் சக்கரவர்த்தியும் அவருடன் பணியாற்ற துவங்கினாராம். டப்பிங்கின்போது திரையை கூட பார்க்காமல் கீழே பார்த்துக் கொண்டே டப்பிங் கொடுப்பார் என்றும் அது அவ்வளவு துல்லியமாக யாருக்கு பேசுகிறாரோ அவருக்கு பொருந்தும் என்றும் டப்பிங் திறமையில் சரிதா ஒரு ராட்சசி என்றும் சுரேஷ் சக்கரவர்த்தி பாராட்டியுள்ளார். அன்று அவர் கேட்டுக் கொண்டதால் அந்தப் படத்தின் டப்பிங்கை மொத்தமே மூன்றரை மணி நேரத்தில் முடித்துக் கொடுத்தாராம் சரிதா.