புதுடெல்லி: குஜராத் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் எவ்வளவு காலத்துக்கு பிரதமர் மோடி மவுனமாக இருப்பார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பதிவில், “போதைப் பொருள் தொழிலை எளிதாக செய்வதற்கு குஜராத் ஏற்ற மாநிலமா என்ன? பிரதமரே இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் குஜராத்தை அடைந்துள்ளது. காந்தி – படேலின் புண்ணிய பூமியில் இந்த விஷத்தை பரப்புவது யார்? மீண்டும் மீண்டும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட போதிலும் துறைமுக உரிமையாளரிடம் இதுவரை ஏன் விசாரணை நடத்தப்படவில்லை? குஜராத்தில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் கும்பலை என்சிபி மற்றும் பிற அரசு அமைப்புகளால் ஏன் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை? மத்தியிலும் குஜராத்திலும் தங்கள் மாஃபியா நண்பர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பவர்கள் யார்? பிரதமரே எவ்வளவு காலத்துக்கு நீங்கள் மவுனமாக இருப்பீர்கள்? கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்” என்று கூறியுள்ளார்.
குஜராத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரிகளின் சோதனையில் ரூ.1,026 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் சிக்கிய நிலையில் ராகுல் காந்தி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.