சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால நீட்டிப்பு நாளையுடன் முடிவடையும் நிலையில், அதன் விசாரணை அறிக்கை முதல்வரிடம் இன்று சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ல் மறைந்தார். அவரதுமரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதுபற்றிவிசாரிக்க முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணைநடைபெற்று வந்தது. சசிகலா, ஓபிஎஸ், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை தொடர்பான அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்ற நிலையில், ஆணையத்தின் பணிக்காலத்தை ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதற்கிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி எய்ம்ஸ் மருத்துவக் குழு விசாரணை நடத்தியது. அந்தவிசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டி இருந்ததால், ஆணையத்துக்கான அவகாசத்தை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கஅரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு, அரசும் 14-வது முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஆகஸ்ட் 24-ம் தேதி (நாளை) வரை கால நீட்டிப்பு வழங்கியுள்ளது.
இந்த சூழலில், எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அறிக்கை கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆறுமுகசாமி ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனால், ஆணைய அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே, ஆணையத்துக்கு வழங்கப்பட்ட கால நீட்டிப்புநாளையுடன் முடிகிறது. முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு கோவைபுறப்பட்டுச் செல்லும் நிலையில்,ஆணையத்தின் அறிக்கை முதல்வரிடம் இன்று சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது.