அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ரெட் சில்லீஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார், மேலும் படத்தில் யோகி பாபு மற்றும் ப்ரியாமணி ஆகியோர் நடிக்கின்றனர், இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வட இந்தியாவில் நடத்தி முடிக்கப்பட்டு தற்போது படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் வருகிற ஆகஸ்ட்-24ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. மாஸ்டர், உபென்னா மற்றும் விக்ரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதி ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விஜய் சேதுபதியின் பிஆர்ஓ இணையதள பக்கத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது சென்னையில் நடக்கவுள்ள ஜவான் படத்தின் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்துகொள்ள இருக்கிறார். மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோனே ஒப்பந்தமாகியுள்ளதாக சில செய்திகள் வெளியானது, தற்போது அவரும் சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஷாரூக்கானுடன், தீபிகா படுகோனே சென்னை வந்து இறங்கியுள்ளார். ‘ஜவான்‘ படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது, அதாவது அப்பா மற்றும் மகனாக நடிக்கிறார் என்றும் அதில் அப்பாவாக நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார் என்றும் மகனாக நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்றும் சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படத்தில் தளபதி விஜய்யை சிறப்பு வேடத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக பல செய்திகளில் வெளியானது. தற்போது விஜய் இந்த படத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டால் சென்னையில் நடைபெற போகும் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் அடுத்த இரண்டு வாரங்களில் அவர் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது.