புதுடெல்லி: மும்பை பத்ரா சாவல் குடியிருப்பு மறுமேம்பாட்டு திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகளில் சிவசேனா மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத்துக்கு தொடர்புள்ளதாக கூறி அமலாக்கத் துறையினர் அவரை ஆகஸ்ட் 1-ம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக ராவத் மனைவி மற்றும் அவரது உதவியாளர்களிடமும் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது.
அதன்பின் அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அவர் மத்திய மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. ரூ.1,039.79 கோடி அளவுக்கு பண மோசடி நடைபெற்றுள்ள இந்த வழக்கு முக்கிய கட்டத்தில் உள்ளதாகவும், நிதி முறைகேடு தொடர்பாக இந்த வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்றும் அமலாக்கத் துறை நீதிமன்றத்திடம் தெரிவித்தது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் இந்த வழக்கினை விசாரித்த மும்பை சிறப்புநீதிமன்ற நீதிபதி எம்.ஜி. தேஷ்பாண்டே, சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 5-ம் தேதி வரை நீட்டித்து நேற்று உத்தரவிட்டார்.