‘சத்யேந்திர ஜெயினுக்கு பத்ம விபூஷன்; மணிஷ் சிசோடியாவுக்கு பாரத ரத்னா; அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோபல் பரிசு’ என்று கிண்டல் செய்யும் தொனியில் பேசியுள்ளார் பாஜக தேசிய பொதுச் செயலாளர் சந்தோஷ்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த ஆண்டு நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், மதுக்கடை உரிமம் ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்தவும் துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார். இதையடுத்து, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தொடர்பாக சிசோடியா உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மணிஷ் சிசோடியா முதல் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பிரிவுகள், பணப் பரிமாற்ற மோசடி தொடர்பானவை. இது தொடர்பாக மணிஷ் சிசோடியாவிடம் விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஆம் ஆத்மி – பாஜக தலைவர்களுக்கு இடையே கடும் வார்த்தை மோதல் நடந்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ள மணிஷ் சிசோடியாவுக்கு ‘பாரத ரத்னா விருது’ கொடுப்பதற்கு பதிலாக, அவரது வீட்டில் சிபிஐ சோதனை செய்வதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்திருந்தார். இதற்கு கிண்டல் தொனியில் பதிலளித்த பாஜக தேசிய பொதுச் செயலாளர் பிஎல் சந்தோஷ், “சத்யேந்திர ஜெயினுக்கு பத்ம விபூஷன்; மணிஷ் சிசோடியாவுக்கு பாரத ரத்னா; அடுத்த நோபல் பரிசு தனக்கே; பெரும் அராஜகவாத கட்சி” என்று ட்விட்டரில் அவர் பதிவிட்டிருக்கிறார்.
இதனிடையே, ஆம் ஆத்மியைத் துறந்துவிட்டு பாஜகவில் இணைந்தால் தன் மீதான அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும் என்று பாஜக தனக்கு தூது அனுப்பியுள்ளதாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியுள்ளார். இருப்பினும் உயிரே போனாலும் சதிகாரர்களுக்கு அடிபணிய மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: குஜராத்தில் அதிகளவில் சிக்கும் போதைப்பொருட்கள்! மோடி மவுனம் காப்பது ஏன்? – ராகுல் காந்திSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM