வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
அந்த தினசரி பத்திரிக்கையில் நடுவில் ஒரு பக்கத்தில் தினமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஒரு மீம்ஸ் போட்டிருப்பார்கள். அதில் ஒன்றில், ஒரு வடிவேல் படக்காட்சியை பின்னணியில் கொண்டு இப்படி ஒரு வசனம் போட்டிருந்தார்கள்…அந்த வசனம், ‘யாரையாவது ரொம்ப நாள் கழிச்சி பார்த்தா, நல்லா இருக்கியா, எப்படி இருக்கன்னு கேளுங்கடா, அதை விட்டுட்டு….’ என்று தொடரும்.
இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், இதே வசனம் அடிக்கடி என் மனத்திலும் தோன்றும். எப்போது? எப்போதெல்லாம் சில நண்பர்களை, உறவினர்களை சந்திக்கும்போதோ, அப்போதெல்லாம்.
தற்போது, மனிதர்களுக்கு என்னவானது என்றே புரியவில்லை. பல நாட்கள் கழித்து ஒரு நண்பரையோ, உறவினரையோ சந்திக்கும்போது, அவர்கள் பேசும் முதல் வாக்கியமே இது போன்று தான் ஆரம்பிக்கின்றது..
‘என்ன இளைச்சி போன மாதிரி இருக்கீங்க’..என்றோ,
‘என்ன டல்லா இருக்கீங்க, உடம்பு கிடம்பு சரியில்லையா?’ என்றோ,
‘ரொம்ப வயசான மாதிரி ஆகிட்டிங்க’ என்றோ,
‘ரொம்ப ஒல்லியாகிட்டிங்க போல, சுகர் வந்திருச்சா?’ என்றோ தான் அவர்கள் பேசும் முதல் வாக்கியம் இருக்கின்றது.
அது போன்ற சமயங்களில் எல்லாம், மேலே வடிவேல் மீம்ஸில் சொன்ன வசனம் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால், நாகரீகம் கருதி அந்த வசனத்தை பேச முடிவதில்லை.
இதை படிக்கும் உங்களில் பலரும் இதுபோன்ற கேள்விகளை பல நேரங்களில் எதிர்கொண்டிருக்கலாம்.
அந்நாட்களில், ஒரு நண்பரையோ, உறவினரையோ நேரில் சந்திக்கும்போது,
‘நல்லா இருக்கீங்களா’,
‘சவுக்கியமா இருக்கீங்களா?’,
‘சுகம் தானே’,
‘சுகமா இருக்கீங்களா’,
‘நலம் தானே’
என்றோ அந்தந்த வட்டார வழக்கத்தில் முதலில் நலம் விசாரித்துவிட்டு தான் மற்ற விஷயங்களை பேச தொடங்குவார்கள் தமிழர்கள். ஆனால், தற்போதைய காலகட்டத்திலோ நிலைமை வேறு.
‘என்ன இளைச்சி போன மாதிரி இருக்கீங்க’..அல்லது ‘என்ன டல்லா இருக்கீங்க, உடம்பு கிடம்பு சரியில்லையா?’ போன்ற கேள்விகளை சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது. அது ஒருவரின் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் அளவிடமுடியாதது. இது போன்ற கேள்விகளை எதிர்கொள்ளும்போது, நன்றாக ஆரோக்கியமாக இருப்பவரும் சற்று தளர்ந்து போவார். ஏனென்றால், அது அவர்களின் தன்னம்பிக்கையின் அளவையே சற்று குறைத்துவிடும் அளவுக்கு வலிமை வாய்ந்தது. மேலுக்கு, அது போன்ற கேள்விகள் தங்களை பாதிக்காதது போல சிலர் காட்டிக்கொண்டாலும், அவர்கள் உள்மனதில் அந்த கேள்விகள் அரித்துக்கொண்டே தான் இருக்கும்.
வெளியிடத்தில் தான் இந்த பிரச்னை என்றால், வீட்டுக்கே வந்து நம்மை இது போன்ற கேள்விகள் கேட்டு தர்மசங்கடம் ஏற்படுத்தும் நபர்களும் உண்டு. தன்னுடைய மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க என் வீட்டுக்கு மகனுடன் உறவுக்காரர் ஒருவர் வந்திருந்தார். அந்த திருமண மாப்பிள்ளையை சுமார் 10 வருடங்கள் கழித்து அன்றைக்கு தான் மீண்டும் சந்திக்கிறேன். வெளிநாட்டில் வேலை செய்கிறான். அவன் உள்ளே வந்து என்னை பார்த்ததும் பேசிய முதல் வாக்கியமே, ‘என்னண்ணே ரொம்ப வயசான மாதிரி ஆகிட்டிங்க’ என்பது தான். இது எந்த விதமான மனநிலை என்பது எனக்கு புரியவில்லை. ‘ஏண்டா, பத்து வருஷமா அப்படியே இருக்க நான் என்ன ரோபோட்டா?’ என்று கேட்கவேண்டும் என்று தோன்றினாலும், நாகரீகம் கருதி கேட்கவில்லை.
படித்து வெளிநாட்டில் வேலை பார்த்தாலும் இங்கிதம் தெரியவில்லை அவனுக்கு என்பதை நினைத்தால் எனக்கு சிரிப்பு தான் வந்தது. திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்தவர்கள், வந்த வீட்டில் நலம் விசாரித்துவிட்டு அழைப்பிதழை கொடுப்பது தானே முறை. அவன் பேசுவதை பார்த்து எதுவும் சொல்லாமல் அப்படியே அமர்ந்திருந்த அவன் தந்தையை பார்த்து எனக்கு கோபம் வந்தாலும் எதுவும் பேசாமல் ஒரு மெல்லிய சிரிப்புடன் அழைப்பிதழை வாங்கிக்கொண்டு அவர்களை உபசரித்து விட்டு அனுப்பினேன்.
உணவை குறைத்து சற்று ஒல்லியாக உடலை பராமரித்தால், அவர் இளைத்து போய்விட்டார், சுகர் இருக்கும். தலைமுடியும், மீசை, தாடியில் வெள்ளை முடி தென்பட்டால் அவர் டல்லாக இருக்கிறார் அல்லது வயதான தோற்றம் வந்துவிட்டது. என்று நம்முடைய ஒவ்வொரு தோற்றத்திற்கும் ஏதோ ஒரு விளக்கம் கற்பிக்கிறார்கள் தமிழர்கள். ஒல்லியாக இருந்தால் ஏழை, பணமில்லாததால் சதைபிடிக்க வில்லை என்று விதவிதமான கற்பிதங்கள்.
மற்றவர்களுக்கு பயந்துகொண்டு தான் தலை, மீசை, தாடி என்று எங்குபார்த்தாலும் கருப்பு மையை பூசிக்கொண்டு திரிகிறார்கள் என்று தோன்றுகிறது. இதில்,70 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூட விதிவிலக்கில்லை. முடியே இல்லாதவர்கள் விக் வைத்துக்கொண்டு திரிகிறார்கள்.
அன்று ஒரு நாள் காலையில் நடைப்பயிற்சி முடித்துவிட்டு, 6 மணி அளவில் நான் வழக்கமாக செய்தித்தாள் வாங்கும் அண்ணாச்சி கடையில் செய்தித்தாள் வாங்கிக்கொண்டிருந்தபோது, ஒரு நபர் வந்து தலைச்சாயம் பாக்கெட் ஒன்று வாங்கிக்கொண்டு போனார். அவர் போனதும், அண்ணாச்சி என்னிடம் சொன்னார், ‘அவருக்கு எவளோ வயசு தெரியுமா? 72 வயசாகுது. இன்னும் தலையில கருப்பு அடிக்காம எங்கேயும் போகமாட்டார்’ என்று சொல்லிவிட்டு,
‘இப்பல்லாம், மத்த பொருளைவிட டை பாக்கெட் தான் அதிகமா விக்குது’ என்று சொன்னார்.
இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. இந்தியாவில் ஹேர் டை/ டை ஷாம்ப்பூ மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு வருவதாக ஒரு ஆய்வு சொல்கிறது.
இது போல பல விஷயங்களில், அடுத்தவர்களுக்காகவே யோசித்து, அதன் மூலம் வரும் அழுத்தத்தை சமாளிக்க தினசரி வாழ்வில் பல்வேறு செயல்களை(தங்களுக்கு அது பிடிக்காமல் இருந்தாலும்) செய்து, அதன் மூலம் பல்வேறு சிரமங்களையும் எதிர்கொள்கிறார்கள் மனிதர்கள்.
ஒரு நண்பரையோ, உறவினரையோ சந்திக்கும்போது, சங்கடம், வருத்தம் கொடுக்கும் கேள்விகளை தவிர்க்கலாமே. அதுபோன்ற கேள்விகளை தவிர்த்தால் இருவருக்குள் ஏற்படும் மனக்கசப்பை தவிர்க்கலாம் அல்லவா?
இனியாவது, ஒரு நண்பரையோ, உறவினரையோ சந்தித்தால் நலம் மட்டும் விசாரியுங்களேன் ப்ளீஸ்.
நன்றி.
–விஜயகுமார் ஜெயராமன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.