வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களின் மீதான விசாரணையின்போது, பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரியதை அடுத்து விசாரணை, ஆக.,25க்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஜூலை 11ல், பழனிசாமி தரப்பு கூட்டிய, பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த மனுக்களை, நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘பழனிசாமி தரப்பு ஜூலை 11ல் கூட்டிய பொதுக்குழு செல்லாது; ஜூன் 23க்கு முந்தைய நிலையே கட்சியில் தொடரும்; ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்; இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியின் ஒப்புதல் இன்றி, நிர்வாக குழு அல்லது பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடியாது’ என கூறியிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவில், ‛தனி நீதிபதியின் உத்தரவை, நடைமுறைப்படுத்த இயலாது. அரசியல் கட்சியின் உள்விவகாரங்களில் நேரடியாக தலையிடுவதாக உள்ளது. பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை புறக்கணிப்பதாகவும் உள்ளது. கட்சி செயல்பாடுகளில் மட்டுமின்றி, பெரும்பான்மையினரின் விருப்பத்திலும், இந்த உத்தரவு குறுக்கிடுகிறது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். அதுவரை, அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என கூறப்பட்டது.
தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இன்றி, மேல்முறையீட்டு மனுவுக்கு எண் வழங்கி, விசாரணைக்கு பட்டியலிடக் கோரி, பழனிசாமி தாக்கல் செய்த கூடுதல் மனு, நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில், நேற்று (ஆக.,22) விசாரணைக்கு வந்தது. அப்போது பழனிசாமி சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜரானார். அவரது வாதத்தை ஏற்று, மேல்முறையீட்டு மனுக்களின் விசாரணையை, இன்றைக்கு பட்டியலிட, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் இன்று விசாரணை துவங்கியபோது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் கூடுதல் அவகாசம் கோரினார். இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை ஆக.,25க்கு ஒத்திவைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement