கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப் பள்ளத்தில் கர்நாடகா பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்த பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இருந்து சிறிது தொலைவில் அமைந்திருக்கும் பகுதி டம்டம்பாறை. தேனி மாவட்டத்தில் உள்ள இந்தப் பகுதி புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த மலைப்பகுதிக்கு கர்நாடாகாவைச் சேர்ந்த பேருந்து ஒன்று 40 சுற்றுலா பயணிகளுடன் இன்று காலை வந்துக் கொண்டிருந்தது. பயணிகள் அனைவரும் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
காலை 11 மணியளவில் மலைப் பாதையில் உள்ள வளைவில் திரும்பும் போது பேருந்து நிலைத்தடுமாறி அங்கிருந்த 30 அடி பள்ளத்தில் செங்குத்தாக விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் பலர் காயமடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு வந்த தீயணைப்புப் படையினர் கயிறு மூலம் பள்ளத்தில் இறங்கி பேருந்தின் கண்ணாடியை உடைத்து பயணிகளை மீட்டனர்.
அதிர்ஷ்டவசமாக, பள்ளத்தில் விழுந்த பேருந்து மேற்கொண்டு உருளாததால் பெரிய மலைப் பள்ளத்தில் விழுந்து பெரும் அசம்பாவிதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டனர். நல்வாய்ப்பாக, இந்த விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
பொதுவாக ஊட்டி, கொடைக்கானல் ஆகியவை மலைப் பாதையில் அமையப்பெற்றுள்ளதால் இங்கு செல்லும் வாகனங்கள் மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டியது அவசியம். குறிப்பாக, ஊட்டியை விட கொடைக்கானலுக்கு செல்லும் வழிதான் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. இங்கு 18-க்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகள் இருப்பதாலும், செங்குத்தான மலை என்பதனாலும் கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவது உண்டு. இதில் பல விபத்துகளில் ஏராளமானோர் பலியாகியும் உள்ளனர். இவ்வாறு விபத்துக்குள்ளாகும் வாகனங்களில் பேருந்துகளும், லாரிகளும் தான் அதிகம். ஏனெனில், பேருந்துகள் பெரிதாக இருப்பதால் கொண்டை ஊசி வளைவில் செல்வது கடினம் ஆகும். எனவே, கொடைக்கானலுக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கு அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களே அமர்த்தப்படுவார்கள்.