சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான எடப்பாடி பழனிச்சாமியின் மேல்முறையீடு மனுமீதான விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 25ந்தேதி விசாரிக்கப்படும் என நீதிமன்றம் கூறி உள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் தீவிரமடைந்த நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழு மீண்டும் கூடியது. அதில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதுடன், கட்சிகளின் விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், எடப்பாடி கூட்டிய பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்ததுடன், ஜூன் 23ந்தேதி அதிமுக பொதுக்குழு கூடுவதற்கு முன்பு இருந்த நிலையே தொடரும் என தீர்ப்பு வழங்கினார்.
இதை எதிர்த்து, எடப்பாடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று விசாரணை தொடங்கவிருந்த நிலையில், இன்று (23ந்தேதி) விசாரிக்கப்படும் என நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையடுத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராக வேண்டியது இருப்பதாகல், அவகாசம் தேவை என கூறப்பட்டது, ஓபிஎஸ்-ன் கோரிக்கையை ஏற்று, ஈபிஎஸ்சின் மேல்முறையீடு வழக்கு 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.