பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுவித்த குஜராத் மாநில அரசின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் மதக் கலவரம் நடந்த போது, 5 மாத கா்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். அப்போது அவருக்கு வயது 21. அவரின் 3 வயது மகள் உட்பட குடும்ப உறுப்பினா்கள் 7 பேரை வன்முறை கும்பல் கொலை செய்தது.
இந்த சம்பவம் தொடா்பாக 2008 ஆம் ஆண்டு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. 14 ஆண்டுகள் சிறை வாழ்க்கைக்குப் பிறகு, அவா்கள் அனைவரையும், 76வது சுதந்திர நாளில் குஜராத் மாநில பாஜக அரசு விடுதலை செய்தது. கடந்த 1992 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட சிறைக் கைதிகள் தண்டனைக் குறைப்பு கொள்கை அடிப்படையில், அவா்கள் விடுவிக்கப்பட்டதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
11 பேர் விடுதலை செய்யப்பட்டது குறித்து பேசிய பில்கிஸ் பானு, ‘எனது வாழ்க்கையை சீரழித்த 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டு உள்ளனா் என்று கேள்விப்பட்ட போது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் மீண்டும் எனக்குள் வந்து சேர்ந்தது. அவர்களின் விடுதலை, என் அமைதியை பறித்தது மட்டுமல்லாமல் நீதி மீதான நம்பிக்கையை அசைத்து விட்டது’ என வேதனை தெரிவித்தார்.
இந்நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சுபாஷினி அலி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரிக்க, உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.