சரிவர வேலை பார்க்காமல் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு இனி சம்பளம் தர இயலாது என, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்து உள்ளார்.
அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத வகையில், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை, சமையல் கேஸ் சிலிண்டர் விலை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த பொது மக்கள், அந்நாட்டு அரசுக்கு எதிராக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் எதிர்பார்த்ததை விட தீவிரமானதை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில், அதைத் தொடர்ந்து, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே, அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, இலங்கையின் புதிய அதிபராக, ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுள்ளார். இலங்கை பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்க அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
‘ஏலே புடின் காத பாத்தீங்களா?’ ‘பாடி டபுள்’ என்றால் என்ன?
இந்நிலையில், சரிவர பணியாற்றாத அரசு ஊழியர்கள், ராஜினாமா செய்து விட்டு வீட்டிற்குச் செல்லலாம் என, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்து உள்ளார். அனுராதபுரம் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, “சரிவர வேலை பார்க்காமல் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு இனி சம்பளம் தர இயலாது என்றும், வேலை பார்க்காத அரசு ஊழியர்களுக்கு இலவசமாக உணவளிக்க முடியாது” என்றும் கூறினார்.
மேலும், “வேலை செய்ய முடியாவிட்டால் அரசு ஊழியர்கள் வீட்டிற்குச் செல்லலாம் என்றும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிகள் செய்து உள்ளதாகவும், அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தி, விவசாயப் புரட்சியைத் தொடங்குவோம்” என்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்கே குறிப்பிட்டு உள்ளார்.