இலவச வேட்டி சேலை திட்டத்திற்காக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய ரூ. 158 கோடி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், பாஜக மகளிரணி தேசியத் தலைவருமான
வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் 1983 முதல் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, ஏழைகள், முதியோர், விதவை, ஆதரவற்றோர் என சுமார் 1 கோடியே 80 லட்சம் பேருக்கு வேட்டியும், சுமார் 1 கோடியே 80 லட்சம் பேருக்கு சேலையும் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்திற்கு தேவையான வேட்டி – சேலைகள், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு இலவச வேட்டி சேலை உற்பதிக்கான ஆர்டர்கள் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படாதது குறித்து பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும் கேள்வி எழுப்பியிருந்தன.
அதனைத் தொடர்ந்து, “இலவச வேட்டி சேலை திட்டம் தொடரும் என்றும் அதற்காக 2022-2023-ம் ஆண்டு 487 கோடியே 92 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்” கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். ஆனாலும் இதுவரை இலவச வேட்டி சேலைகளுக்கான ஆர்டர்கள் வழங்கப்படவில்லை. இதனால், கடைசி நேரத்தில் பெரு நிறுவனங்களிடம் ஆர்டர் கொடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதோ என்ற சந்தேகம் நெசவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பள்ளிச் சீருடைகள், இலவச வேட்டி சேலை போன்ற அரசின் திட்டங்களை நம்பியே நெசவாளர்கள் உள்ளனர். எனவே, இலவச வேட்டி சேலைக்கான ஆர்டர்களை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும். ஏற்கனவே இரண்டு மாதங்கள் தாமதம் ஆகிவிட்டேன் நிலையில் மேலும் தமிழக அரசு தாமதிக்கக் கூடாது.
இலவச வேட்டி சேலை திட்டத்தின் மூலம் 2,664 கைத்தறி நெசவாளர்கள், 11 ஆயிரத்து124 பெடல் தறி நெசவாளர்கள், 41 ஆயிரத்து, 983 விசைத்தறி நெசவாளர்கள் பயன் பெறுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இலவச வேட்டி சேலை திட்டத்திற்காக வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்து கொடுத்த நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு, 2021-ம் ஆண்டு வரை தமிழக அரசு 158 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைத்துள்ளதாக வரும் செய்திகள் வேதனை அளிக்கின்றன.
158 கோடி ரூபாய் நிலுவைத் தொகையில், 72 கோடி ரூபாய், ஆறு கூட்டுறவு நுாற்பாலைகளுக்கும், மீதமுள்ள தொகை நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கும் வழங்க வேண்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. பணியாளர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாமல் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் நிலுவைத் தொகை அதிகரித்துக் கொண்டே செல்வதால், கடந்த10 ஆண்டுகளாக, நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு போனஸ் கூட வழங்க முடியவில்லை.
ஏற்கனவே நலிந்த நிலையில் இருக்கும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், அரசு வழங்க வேண்டிய தொகையை வழங்காததால் மேலும், நெருக்கடியை சந்தித்து வருகின்றன. எனவே நெசவாளர் விவகாரத்தில் அரசியல் செய்யாமல், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய 158 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பாக பொது மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட வேண்டும். விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனை நிறுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக வரும் தகவல்கள் நெசவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அவர்களுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படுவதையும், தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.