சென்னை: ‘ஆர்டர்லி’ முறையை நான்கு மாதத்திற்குள் ஒழிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல்துறையில் பணியாற்றும் யு.மாணிக்கவேல் என்பவர் காவலர் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் உள்ளவர்களை கட்டுப்படுத்த இயலாவிட்டால், நன்மதிப்பை இழக்க நேரிடும் என தெரிவித்ததுடன், உயர் அதிகாரிகளின் வீடுகளில் ‘ஆர்டர்லி’களை பணியமர்த்துவது, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை உள்ளிட்டவை குறித்தும் விசாரித்தார்.
மேலும், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் ‘ஆர்டர்லி’களை வைத்திருக்கக் கூடாது என்ற தமிழக உள்துறை செயலாளரின் உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில் ஆர்டர்லி விவகாரம் தொடர்பாக தமிழக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில்,’ஆர்டர்லி’ முறையை காவல்துறையினர் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரும்பாலான ‘ஆர்டர்லி’களைத் திரும்ப பெற்றுள்ளதாகவும், மாற்று ஏற்பாடு செய்தவுடன் எஞ்சியவர்களும் திரும்ப பெறப்படுவார்கள்.
காவல்துறை பணி தவிர தனிப்பட்ட பணிகளுக்காக ‘ஆர்டர்லி’களை பயன்படுத்த மாட்டோம் என அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளும் உத்தரவாதம் அளித்துள்ளதாக, டிஜிபி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து நீதிபதி, டிஜிபி எடுத்துவரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது ,பாராட்டுக்குரியது. ‘ஆர்டர்லி’ முறையை ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது தெரிவதாக அரசின் அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் இன்று இறுதி தீர்ப்பளித்த நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம்,” அரசு உத்தரவாதம் அளித்தபடி ‘ஆர்டர்லி’ முறையை நான்கு மாதத்திற்குள் ஒழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.