அதிமுக ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என்று அறிவித்த தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமைக்கு தள்ளி வைத்துள்ளது.
கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், அம்மன் வைரமுத்து தொடர்ந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என்று அறிவித்ததுடன் ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் எம். துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அடங்கி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.ஹெச். அரவிந்த் பாண்டியன், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஆட்சேபம் தெரிவிப்பதாகவும் நேரடியாக மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், வழக்கில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராக இருப்பதால் இறுதி விசாரணையை வியாழக்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் வழக்கில் இறுதி வாதங்களை முன்வைக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மேல்முறையீட்டு வழக்குகளின் இறுதி விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு (ஆகஸ்ட் 25) தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: கள்ளக்குறிச்சி: பள்ளிக் கலவரம் தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM