அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்குவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தி.மு.க சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் தன் தரப்பு வாதத்தை முன்வைத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தேர்தல் சமயங்களில் இலவசமாக தொலைக்காட்சி, பெட்டிகள், சேலைகள் வழங்கப்படுகின்றன என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
தேர்தல் சமயத்தில் அளிக்கப்படுகிற தேர்தல் வாக்குறுதிகளை மட்டும் நீங்கள் நிறுத்த வேண்டும் என்று கேட்கிறீர்களா? அல்லது தேர்தல் சமயங்களை தவிர்த்து ஒட்டுமொத்தமாக இலவச வாக்குறுதிகள் வழங்குவதை நீங்கள் நிறுத்த வேண்டும் என்று கேட்கிறீர்களா?… இலவசங்கள் என்றால் என்ன? நலத்திட்டங்கள் என்றால் என்ன? என்பதை எங்களால் நன்றாக புரிந்து கொள்ளமுடிகிறது.
தி.மு.க மட்டும்தான் மிகவும் சாதுர்யமான, புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்க வேண்டாம். பல விஷயங்கள் குறித்து பேசாமல் தவிர்ப்பதால் அது குறித்து அறியாமல் இல்லை என நினைக்க வேண்டாம்.
கிராமப்புற மாணவிகளுக்கு சைக்கிள் கொடுப்பது அவர்கள் கல்வி கற்று பயனடைவதற்காகவே… மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமங்களுக்கு கால்நடைகள் வழங்குவது அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும். இது போன்ற திட்டங்களை கண்மூடித்தனமாக இலவசம் என நாங்கள் கூறவில்லை” என்றனர்.
மேலும், இது குறித்தான வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.