பனாஜி: டிக்டாக் பிரபலமும் பாஜக நிர்வாகியுமான சோனாலி போகத் கோவாவில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். ஹரியானாவின் ஆதம்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடலாம் என கூறப்பட்ட நிலையில் அவர் இறந்துள்ளார்.
ஹரியானாவை சேர்ந்தவர் சோனாலி போகத் (வயது 43). இவர் டிக்டாக் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். அதன்பிறகு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்றார்.
இந்நிலையில் தான் ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் அவர் பாஜகவில் இணைந்து போட்டியிட்டார். இந்த தேர்தலில் அவர் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
தேர்தல் தோல்வி
அதாவது ஹரியானா மாநிலம் அதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் சோனாலி போகத் போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் குல்தீப் பிஷ்னோய் போட்டியிட்டார். இந்த தேர்தலில் சோனாலி போகத் தோல்வியடைந்தார். இருப்பினும் அவர் தொடர்ந்து பாஜக கட்சியில் செயல்பட்டு வந்தார்.
மீண்டும் போட்டியிட விவாதம்
இந்நிலையில் தான் அதாம்பூர் தொகுதி எம்எல்ஏவான குல்தீப் பிஷ்னோய் தனது பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் ஆதாம்பூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மீண்டும் சோனாலி போகத் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பான விவாதங்கள் நடைபெற்று வந்தன.
மாரடைப்பால் மரணம்
இந்நிலையில் கோவாவுக்கு சென்ற சோனாலி போகத்துக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. வடக்கு கோவாவில் உள்ள செயின்ட் அந்தோனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்தார். முன்னதாக அவர் உயிரிழப்பதற்கு சிலமணிநேரத்துக்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்தின் ப்ரொபைல் படத்தை மாற்றினார். புதிதாக அவர் பதிவு செய்த படத்தில் அவர் தலைப்பாகை அணிந்து சிரித்த முகத்துடன் இருக்கிறார்.
ஹரியானா முதல்வர் இரங்கல்
இதுபற்றி ஹிசார் பாஜகவின் மாவட்ட தலைவர் கேப்டன் பூபேந்தர் கூறுகையில், ‛‛சோனாலி போகத் கோவாவில் இருந்தார். நான் அவரது உதவியாளரிடம் பேசினேன். அப்போது சோனாலி போகத் மாரமடைப்பால் இறந்ததாக தெரிவித்தார்” என கூறியுள்ளார். இதுபற்றி ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறுகையில், ‛‛பாஜக தலைவர் சோனாலி போகத் திடீரென்று மரணமடைந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளேன். இந்த இழப்பை தாங்கி கொள்ள அவரது குடும்பத்தினருக்கு தைரியம் கிடைக்கவும், அவரது ஆன்மா சாந்தியடையவும் வேண்டுகிறேன்” என கூறியுள்ளார்.
சோகம்
முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு சோனாலி போகத்தின் கணவர் சஞ்சய் ஹரியானாவில் உள்ள பண்ணை வீட்டில் மர்மமாமன முறையில் இறந்து கிடந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தான் சோனாலி போகத் மாரமடைப்பால் மரணமடைந்துள்ளார். இவரது மறைவு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.