2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தின் போது கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு சமீபத்தில் விடுவித்தது. இந்நிலையில், 11 பேரின் விடுதலையை எதிர்த்து மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், அபர்ணா பாட் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம்.
“இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து தான் கருத்தில் கொள்வதாக” தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது. கர்ப்பிணியை கூடுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட வழக்கில் நிவாரணம் அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கக் கூடாது என, கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தின் போது கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு சமீபத்தில் விடுவித்தது.
குற்றவாளிகளை விடுவிப்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 11 பேர் விடுவிக்கப்பட்டனர்.
மும்பை சிறப்பு நீதிமன்றம், 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதியன்று, பில்கிஸ் பானு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது, அவரின் குடும்பத்தினர் 14 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளான 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.
குற்றவாளிகள் 15 வருடங்கள் சிறையில் கழித்த பின், அதில் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் முன்னதாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.
அதன்பின் உச்ச நீதிமன்றம் இதுகுறித்து கருத்தில் கொள்ளுமாறு குஜராத் அரசை கேட்டுக் கொண்டது. பின் குஜராத் அரசு கமிட்டி ஒன்றை உருவாக்கியது.
இந்த கமிட்டிக்கு பஞ்ச்மஹால் ஆட்சியர் சுஜல் மயாட்ரா தலைமை தாங்கினார்.
- “எனக்கு குஜராத்திலேயே நீதி கிடைத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்” – பில்கிஸ் பானு
- பில்கிஸ் பானு: குஜராத் கலவரத்தில் பாலியல் வல்லுறவுக்கு எதிராக போராடிய வீரப்பெண்!
குற்றவாளிகளும் 11 பேரும் விடுவிக்கப்பட்டது குறித்து பேசிய பஞ்ச்மஹால் ஆட்சியர் சுஜல் மயத்ரா, “சில மாதங்களுக்கு முன்பு கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டு இவர்களை விடுவிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அந்த முடிவு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது” என்று தெரிவித்தார்.
பில்கிஸ் பானு வழக்கு?
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். அவரின் குடும்பத்தினர் 14 பேர் கொல்லப்பட்டனர்.
அப்போது 20 வயதான பானு கர்ப்பமாக இருந்தார். பில்கிஸின் 3 வயது மகள், பில்கிஸ் பானுவின் கண்முனே கொல்லப்பட்டார்.
பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பில்கிஸ் பானு அருகாமையில் உள்ள இடத்திற்கு சென்று உயிர்ப்பிழைத்தார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு காவல்துறையை சேர்ந்த சிலர் பில்கிஸ் பானுவை அச்சுறுத்தி ஆதாரங்களை அழித்தனர்.
பில்கிஸ் பானுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் வல்லுறவு செய்யப்படவில்லை என தெரிவித்தனர். பில்கிஸ் பானுவிற்கு கொலை மிரட்டல்களும் வந்தன.
பில்கிஸ் பானுவின் குடும்பத்தினரின் உடல்கள் எந்த பரிசோதனைக்கும் உட்படுத்தப்படாமல் எரியூட்டப்பட்டன.
இருப்பினும் பில்கிஸ் பானு தொடர்ந்து போராடினார். தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டார். இதுகுறித்த முதல் கைது கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்றது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைத்தது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உதவியோடு, பில்கிஸ் பானுவின் வழக்கு மகராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
குஜராத் நீதிமன்றம் நீதியை வழங்க இயலாது என்ற பில்கிஸ் பானுவின் மனுவை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.
17 ஆண்டுகால போராட்ட வாழ்க்கையில் பில்கிஸ் பானுவும் அவரின் கணவரும் தங்களது குழந்தைகளுடன் இதுவரை 10 வீடுகள் மாற வேண்டியிருந்தது.
2017ஆம் ஆண்டு பிபிசி செய்தியாளர் கீதா பாண்டேவிடம் பேசிய பில்கிஸ் பானு, “காவல்துறையும், அரசு நடைமுறைகளும் தாக்குல்தாரிகளின் பக்கமே இருந்தன. குஜராத்தில் நாங்கள் யாரிடமும் பேச முடியாது. எங்கள் விலாசத்தைக் கூட யாரிடமும் வழங்க முடியாது.” என்று தெரிவித்தார்.
https://www.youtube.com/watch?v=AsVaMJL28oI&t=1s
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்