ராமநாதபுரம், பரமக்குடி பகுதிகளில் வீடுகளின் பின்பக்க கதவுகளை உடைத்து நகைப் பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டன. இது குறித்து கொள்ளை நடந்த வீட்டின் உரிமையாளர்கள் செல்வகுமார், வசந்த், மகிதாராணி ஆகியோர் ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸில் புகார் அளித்தனர். அதன்படி கொள்ளை நடந்த வீடுகளில் தடயவியல் நிபுணர்கள் மூலம் சோதனை செய்யப்பட்டது.
கொள்ளை நடந்த வீடுகள் அனைத்திலும் ஒரே மாதிரியாக கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதில் ஒரு வீட்டில் மட்டும் கொள்ளையனின் கைரேகை கிடைத்திருக்கிறது. அதையடுத்து, கிடைக்கப்பெற்ற கைரேகை மூலம் விசாரணை தொடங்கப்பட்டது. அதன்படி இதே கைரேகை கோவையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு தலைமறைவாகவுள்ள இலங்கையைச் சேர்ந்த அப்துல் ரியாஸ்கான் என்பவர் கைரேகையுடன் ஒத்துப்போனது.
அதைத் தொடர்ந்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில் தனிப்படை போலீஸார் அப்துல் ரியாஸ்கானை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அவர் பாண்டிச்சேரியில் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. அதன் பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீஸார் பாண்டிச்சேரி அண்ணா நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் பதுங்கியிருந்த அப்துல் ரியாஸ்கானை கைதுசெய்தனர்.
அவரிடமிருந்து 14 பவுன் நகை, 45 ஆயிரம் ரொக்கம், மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட பல வகையான இரும்பு ஆயுதங்களை பறிமுதல் செய்து, ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்தனர். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை திருகோணமலையைச் சேர்ந்த அப்துல் ரியாஸ்கான், கடந்த 2019-ம் ஆண்டு கள்ளப்படகு மூலம் தமிழ்நாடு வந்து கோவை, சென்னை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
இவர்மீது கோவை, சென்னை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் 12 திருட்டு வழக்குகளும், மதுரையில் பாஸ்போர்ட் வழக்கும் பதிவுசெய்யப்பட்டு, தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
`தீரன் அதிகாரம் ஒன்று’ பட பாணியில் கைரேகையை வைத்து குற்றவாளியைக் கைதுசெய்த தனிப்படை போலீஸாரை ராமநாதபுரம் எஸ்.பி தங்கதுரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.