இந்தியத் திரையுலகில் இன்று முக்கியமான இயக்குநராக ஜொலிப்பவர் இயக்குநர் ராஜமௌலி. அவர் இயக்கிய ‘பாகுபலி-1’, ‘பாகுபலி-2’, ‘ஆர்.ஆர்.ஆர்’ உள்ளிட்ட பல படங்களை எழுதியவர் அவரது தந்தை விஜயேந்திர பிரசாத். இப்படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. இருப்பினும், இப்படங்களில் இந்துத்துவா தொடர்பான கருத்துகள் இருப்பதாக விமர்சனங்களும் எழுந்திருந்தன.
இந்நிலையில் இயக்குநர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத், பெங்காலி எழுத்தாளரான பங்கிம் சந்திரா எழுதிய ‘ஆனந்தமத்’ (Anandamath) என்னும் புத்தகத்தைத் தழுவி உருவாகும் ‘1770’ என்ற படத்துக்குக் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். ஆறு மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை அஷ்வின் கங்கராஜு இயக்குகிறார்.
இப்படம் இந்திய விடுதலைக்காக பிரிட்டிஷ் அரசிடம் போர் செய்த சன்னியாசிகளின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கான தயாரிப்பு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தில் இந்துத்துவா அமைப்பின், குறிப்பாக RSS சித்தாந்தத்தின் பிரசாரம் அதிகம் இருப்பதாகச் சர்ச்சைகள் எழுந்துள்ளன. மேலும் பாரதிய ஜனதா கட்சி விஜயேந்திர பிரசாத்தை ராஜ்ய சபாவுக்குப் பரிந்துரைத்ததிலிருந்து அவர் வெளிப்படையாகத் தன் படங்களில் RSS சித்தாந்தத்தைப் பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளதாகச் சர்ச்சைகள் எழுந்துவருகின்றன.
இந்தச் சூழலில் அண்மையில் வெளியான தன் தந்தை விஜயேந்திர பிரசாத்தின் ‘1770’ படத்தின் பர்ஸ்ட் லுக் தொடர்பான போஸ்டர்களை தனது சமூக வலைதளங்களில் பகிரவேண்டாம் என்று இயக்குநர் ராஜமௌலி கண்டிப்புடன் கூறியதாகத் தகவல்கள் பரவிவருகின்றன. படம் தொடர்பாக அவர் எதுவும் வெளிப்படையாக தன் கருத்துகளைத் தெரிவிப்பாரா என்பது தெரியவில்லை.