’’நான் எத்தனையோ கடவுளை வேண்டி இருக்கிறேன்; எந்த கடவுளும் எதுவும் செய்யவில்லை. எனக்கு முதல்வர் ஸ்டாலின் தான் கடவுள்’’ என்று பேசுகிறார் ஸ்டீபன்ராஜ். இவர் ஏன் இப்படி சொல்கிறார் என்பதனை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி செளபாக்கியம். இந்த தம்பதிக்கு 9 வயதில் தான்யா என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி அரியவகை முகச்சிதைவு நோயில் பாதிக்கப்பட்டுள்ளார்.
தான்யாவிற்கு 3 வயதாக இருக்கும்போது முகத்தில் கரும்புள்ளி போன்று தோன்றியுள்ளது. இதனை முதலில் சாதாரண ரத்தக்கட்டு என நினைத்த பெற்றோர்கள் கடந்த 2017ஆம் ஆண்டுமுதல் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை உட்பட 6க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை நாடி தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். எனினும் அந்த பாதிப்பானது குறைந்த பாடில்லை. இதனால் தான்யாவின் பெற்றோரான ஸ்டீபன் ராஜ் – சௌபாக்கியம் தம்பதியினர் தங்களது சக்திக்கு மேலாக கடன் பெற்று செலவு செய்தும் மருத்துவம் பார்த்தும் எந்த பயனும் இல்லை.
நாட்கள் போக போக தான்யாவின் முகம், வலது கன்னம், தாடை, உதடு என ஒரு பக்கம் முழுவதிலும் சிதைவு ஏற்பட தொடங்கியுள்ளது. இதனால் குழந்தையின் அழகிய முகம் மிகவும் பாதிப்படைந்தது. உடன் பயிலும் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கி அன்பை புகட்ட வேண்டிய ஆசிரியர்களும் தான்யாவை அவருக்குள்ள குறைபாடுகளை காரணம் காட்டி வெறுத்து ஒதுக்கி தனிமைப்படுத்தி உள்ளனர். இதனால் பள்ளி படிப்பை கைவிட்டார் தான்யா.
சிறுமி தான்யாவின் பிரச்சனை குறித்தும், அந்த குடும்பத்தின் வறுமை குறித்து புதிய தலைமுறை வெளியிட்ட செய்தியின் எதிரொலியாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று குழந்தையின் நிலையை அறிந்து அரசின் சார்பில் இந்த நோய்க்கான முழு சிகிச்சையையும் பூந்தமல்லி அடுத்துள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டணமின்றி செய்வதற்கு முன்வந்துள்ளது. விளிம்பின் நிலையில் உள்ள ஏழை குழந்தையின் கூக்குரலை கேட்டு முதல்வர் உதவி செய்துள்ளார். அறுவை சிகிச்சை முடிந்த பின்பு முதல்வரை சந்திக்க சிறுமி ஆசைப்பட்டுள்ளதாக கூறுகிறார் அமைச்சர் நாசர்.
தான்யா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டதிலிருந்து கடந்த 6 நாட்களாக அமைச்சர் நாசர் சிறுமியை தினமும் வந்து பார்த்து சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து குழந்தைக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார் தான்யா. சுமார் 8 மணி்நேரம் நடக்கும் இந்த அறுவை சிகிச்சைக்கு பயப்படாமல் தனக்கு மீண்டும் பழைய முகம் வந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் தைரியமாக அறுவை சிகிச்சை அறைக்கு சென்றுள்ளார் சிறுமி். இதனால் சிறுமியின் தாயார் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை ஸ்டீபன்ராஜ் கூறுகையில், ’’நான் எத்தனையோ கடவுளை வேண்டி இருக்கிறேன்; எந்த கடவுளும் எதுவும் செய்யவில்லை. எனக்கு முதல்வர் ஸ்டாலின் தான் கடவுள்’’ என்று உணர்ச்சிபொங்க கூறியுள்ளார். இந்த அறுவை சிகிச்சையினால் சிறுமியின் கன்னம் சீரடைந்து, தன்னம்பிக்கை ஏற்பட்டு மீண்டும் பள்ளிப்படிப்பை தொடர வேண்டும் என்பது தான் பொதுமக்களின் ஆசையாக உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM