புதுடெல்லி: இலவச திட்டங்கள் ெதாடர்பான வழக்கின் இன்றைய விசாரணையின் போது, இவ்வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வாய்ப்புள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. இலவச வாக்குறுதிகளை தடை செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் இலவசங்கள் அறிவிப்பு குறித்து கண்காணிக்க குழு ஒன்றை அமைக்க வேண்டும் என பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபத்யாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு விசாரித்து வருகிறது. கண்காணிப்பு குழு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
சமீபத்தில் நடந்த விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, ‘மாநில அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பதை தடுக்க முடியாது என்ற பரிந்துரை தான் அதிகமாக கிடைத்துள்ளது. அதேவேளையில் இலவசங்கள் எது என்பது தொடர்பாக வரையறுக்க வேண்டும்? மருத்துவ காப்பீடு, குடிநீர் இணைப்பு, நுகர்வோர் மின்னணு பொருட்கள் வழங்குவது ஆகியவற்றை இலவசம் என வகைப்படுத்த முடியுமா?’ என்று கேள்வி எழுப்பி விசாரணையை ஒத்திவைத்தனர். இந்நிலையில் இன்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், ‘இலவச வாக்குறுதிகள் மிகவும் முக்கியமான பிரச்னை. அவை குறித்த விவாதம் தேவைப்படுகிறது.
மாநில அரசுகள் இலவசங்களை வழங்கக் கூடாது என்று ஒன்றிய அரசு சட்டம் இயற்றுமானால், அது நீதித்துறையின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதா? இல்லையா? என்பதை ஒன்றிய அரசு ெதளிவுபடுத்த வேண்டும். ஒருவேளை ஒன்றிய அரசு சட்டம் இயற்றினால் மக்களுக்கான நிவாரணம் என்ன? தேர்தலுக்காக மட்டுமின்றி நாட்டு நலனுக்காகவும் இப்பிரச்னையை அணுக வேண்டும். நாடாளுமன்றம் இப்பிரச்னைக்கு முடிவு எடுக்க தவறிவிட்டது. அதனால் கமிட்டி உருவாக்க பரிந்துரைக்கப்பட்டது. இடைக்காலமாக தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றாலும் கூட 24 மணி நேரங்கள் தேவைப்படும். இவ்வழக்கின் அடிப்படையில் பார்த்தால் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டிய சூழலும் ஏற்படலாம்’ என்றார். ெதாடர்ந்து மாலை வரை விசாரணைகள் நடைபெற்றன.