மதுவிலக்கு மாற்றம்செய்த விவகாரத்தில், கலால் வரியில் முறைகேடு நடந்திருப்பதாக, துணை முதல்வர் மற்றும் கலால் துறை அமைச்சர் மணீஷ் சிசோடியா உட்பட 13 பேர் மற்றும் இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக சி.பி.ஐ எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்கிறது. அதைத் தொடர்ந்து சி.பி.ஐ அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உட்பட டெல்லி என்.சி.ஆர் பகுதியிலுள்ள 21 இடங்களில் சோதனையிட்டனர்.
இந்தச் சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சிசோடியா, “நாங்கள் எந்த ஊழலும், தவறும் செய்யவில்லை. நாங்கள் பயப்படவுமில்லை, சி.பி.ஐ தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்” எனத் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, “எனக்கு பா.ஜ.க-வில் சேர அழைப்பு வந்திருக்கிறது. ஆம் ஆத்மியைவிட்டு வெளியேறி பா.ஜ.க-வில் சேர்ந்தால், அனைத்து சி.பி.ஐ, அமலாக்கப் பிரிவு வழக்குகளையும் முடிவுக்கு கொண்டுவருவதாக கூறினார்கள். ஆனால், நான் என்னையேகூட தியாகம் செய்வேன். ஆனால், ஊழல்வாதிகள் மற்றும் சூழ்ச்சியாளர்களுக்கு முன்னால் தலைவணங்க மாட்டேன். என்மீதான வழக்குகள் பொய்யானவை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்” என்று மணீஷ் சிசோடியா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பா.ஜ.க ஐ.டி பிரிவு தலைவர் அமித் மால்வியா, டெல்லி கலால் கொள்கை ஊழலில் தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) தலைவருமான கே.சந்திரசேகர் ராவ், அவர் மகள் கல்வகுந்த்லா கவிதா ஆகியோருக்கு தொடர்பிருப்பதாகக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், “கே.கவிதாவின் தந்தை கே.சி.ஆர் சமீபத்தில் அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான் ஆகியோரைச் சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது வெறும் தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது. இப்போது மதுபான வியாபாரிகளுடன் கூட்டங்களை ஏற்பாடு செய்ததற்காகவும், சிசோடியாவுக்கு 4.5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததற்காகவும் மதுபான ஊழலில் கல்வகுந்த்லா கவிதா பெயர் இடம்பெற்றிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.