சென்னை: மதிய உணவு திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்தாமல் ஏழை எளிய மாணவர்களின் வயிற்றில் அடிக்கிறது தமிழக அரசு என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும், உணவின்றி தவிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிய உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டமானது பெருந்தலைவர் காமராஜரால் அறிவிக்கப்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட திட்டமாகும். மேலும், மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கலைஞரின் ஆட்சி காலத்திலும் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அரசு மலைவாழ் உண்டு உறைவிட பள்ளியில் மதிய உணவின்றி மாணவர்கள் பரிதவித்த சம்பவம் வேதனை அளிக்கிறது. காலி பாத்திரங்களை காண்பித்து மதிய உணவு இல்லை என மாணவர்கள் சுட்டி காட்டும் அளவுக்கு தமிழக அரசு கவன குறைவாக செயல்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு அனைவராலும் வரவேற்க கூடிய மதிய உணவு திட்டத்தில் தற்போது உணவு கிடைக்காமல் மாணவர்கள் அவதிக்குள்ளான சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது.
மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது என ஏற்கனவே பல்வேறு அவலங்கள் இந்த ஆட்சியில் அரங்கேறி கொண்டிருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் மதிய உணவு திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்தாமல் ஏழை எளிய மாணவர்களின் வயிற்றில் அடிக்கும் தமிழக அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோன்ற அவலநிலை தொடர்ந்து நடைபெறாமல் இருக்க அரசு அதிகாரிகளை நியமித்து தமிழகம் முழுவதும் மதிய உணவு திட்டமானது மாணவர்களுக்கு சரியான முறையில் சென்றடைகிறதா என்பதை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். மேலும் உணவின்றி தவிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிய உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.’
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.