உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை: 4,400 லிட்டர் தரமற்ற எண்ணெய் பறிமுதல்

சென்னையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்ததில் 4 ஆயிரத்து 400 லிட்டர் தரமற்ற எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
பூமிக்கு அடியில் சம்ப்பு கட்டி எண்ணெய் விற்றது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தவிர அசைவ பொருட்களை சமைத்து விற்பனை செய்யும் உணவகங்களில் கலர் சாயம் பூசி விற்பனை செய்வது தொடர்பாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மேற்கு மாம்பலம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ மாலையம்மன் ஆயில் ஸ்டோர்ஸ்  மொத்த விற்பனை கடையில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் சதிஷ்குமார் தலைமையிலான குழுவினர் திடீரென சோதனை செய்தனர். தரமற்ற சமையல் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து உணவு பாதுகாப்பு துறையினர் அங்கு அதிரடி சோதனை செய்தனர். 

 அப்போது கடையின் உள்ளே சோதனை செய்த போது அந்த அதிர்ச்சியான விஷயத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். அங்கே பூமிக்கடியில் சம்ப்பு கட்டி அதில் உணவு சமைக்கும் எண்ணெயை சேமித்து விற்பனை செய்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். 

மேலும் கடையின் உள்ளே இருந்த சம்ப்பில் தரமற்ற நிலையில் எண்ணெய் வைத்திருந்தது அதிகாரிகளின் சோதனையில் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த கடையில் இருந்து பரிசோதனைக்காக எண்ணெயை எடுத்து உள்ளனர். மேலும் தற்காலிகமாக கடையை பூட்டி நோட்டிஸ் ஒட்டி நடவடிக்கை எடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதிஷ்குமார் செய்தியார்களை சந்தித்தார். ‘அந்த கடையில் கலப்பட எண்ணெய் விற்கப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சோதனைக்கு சென்றோம். அப்போது ஒரே சம்பில் சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பாமாயிலை அவர்கள் கலந்து வைத்து விற்பனை செய்து உள்ளது தெரிய வந்தது. இது முறிலும் தவறானது. அங்கிருந்து சன் பிளவர் ஆயில் 1,000 லிட்டர் 3,400 லிட்டர் பாம் ஆயில் என மொத்தம் 4,400 லிட்டர் கெட்டுப்போன எண்ணெயை பறிமுதல் செய்து உள்ளோம்’ என்று அவர் கூறினார்.

அந்த கடை உரிமையாளர் முறையான உரிமம் இல்லாமல் கடையை நடத்தி வந்து உள்ளார் என்றும் ரீடெய்லர்கள் இது போன்று தவறை செய்ய வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் பேசிய அவர் அந்த கடையை தற்காலிகமாக பூட்டி உள்ளதாகவும் எண்ணெய் சம்ப்பில் எடுத்த எண்ணே சோதனைக்கு சென்றுள்ளதாகவும், 10 அல்லது 15 நாட்களில் சோதனை முடிவுகள் வரும் என்றும் கூறினார். அதனைத் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்  அந்தக் கடை உரிமையாளர் யாரிடம் ஆயில் வாங்குகிறார் என்பது விசாரணையில் தெரிய வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

கடையில் விற்கப்படும் அனைத்து பொருட்களிலும் ஐஎஸ்ஐ முத்திரை மற்றும் எக்ஸ்பைரி டேட் இருக்க வேண்டும் என்று கூறிய அவர் பொதுமக்கள் அந்தக் கடையில் இதுபோன்று எண்ணெய் விற்கப்படுவதாக புகார் அளித்ததின் பேரில் தற்போது சோதனை நடைபெற்றதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரூபாய் 10 லட்சம் அபராதம் மற்றும் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறினார். மேலும் பொதுமக்கள் இதுபோன்று புகார் அளிக்க  9444042322 என்ற whatsapp எண்ணில் செதி அனுப்பலாம் என்றும் அந்த புகாரின் மீது இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

மேலும் அசைவ பொருட்களை சமைத்து விற்பனை செய்யும் உணவகங்களில் கலர் சாயம் பூசி விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் தெரிவித்த அவர், அது போல் தயாரிப்பது குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.