அக்ரா: கானாவில் வீட்டில் தூங்கியபோது வந்த கனவால் ஆட்டை வெட்டுவதாக நினைத்து அந்தரங்க உறுப்பை ஒருவர் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு மனிதரும் தனது தூக்கத்தில் கனவு காண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதில் நல்ல கனவு, கெட்ட கனவு என இருவகைகளாக வகைப்படுத்தி உள்ளனர். தங்களின் நன்மை பயக்கும் வகையில் வரும் கனவுகள் நல்ல கனவுகள் எனவும், தனக்கு அல்லது குடும்பத்தினருக்கு கெடுதல் நடக்கும் படியான கனவை தீய கனவு எனவும் கூறுகின்றனர்.
இருப்பினும் கனவு என்பது என்ன? என்பது தொடர்பாக ஒரு முழுமையான அறிவியல் புரிதல் இன்னும் இல்லாத நிலையே உள்ளது. இந்நிலையில் தான் கானா நாட்டு விவசாயி கனவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதுபற்றிய விபரம் வருமாறு:
கானா விவசாயி
மேற்கு ஆப்பிரிக்காவில் கானா நாடு உள்ளது. இங்குள்ள அசின் போசு பகுதியில் வசித்து வருபவர் கோபி அட்டா. விவசாயி. இவருக்கு 42 வயது ஆகிறது. இந்நிலையில் அவர் வீட்டில் உள்ள இருக்கையில் அமர்ந்து கனவு கண்டார். அதாவது வீட்டில் சமையலுக்காக ஆடு வெட்டுவது போல் கனவு வந்தது.
அந்தரங்க உறுப்பை வெட்டிய நபர்
இந்த வேளையில் அவர் தனது கையில் இருந்த கத்தியை எடுத்து அந்தரங்க உறுப்பை வெட்டிக்கொண்டார். இதனால் அவர் வலியால் திடுக்கிட்டு கண் விழித்தார். தான் செய்த செயலை நினைத்து பதறிய அவர் வலியால் துடித்தார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கானாவில் உள்ள மத்திய பிராந்திய மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அறுவை சிகிச்சைக்கு பணம்
மேலும் தற்போது அவர் நலமாக இருந்தாலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். விவசாயி என்பதால் அவரிடம் அறுவை சிகிச்சைக்கான போதிய பணம் இல்லை. இதனால் அறுவை சிகிச்சைக்கு தேவையான பணத்தை திரட்டும் பணியில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் நடந்தது எப்படி?
இதுபற்றி பாதிக்கப்பட்ட நபர் கூறுகையில், ‛‛வீட்டில் உள்ள இருக்கையில் அமர்ந்து கனவு கண்டேன். மாலை நேர சமையலுக்காக எனது மனைவிக்கு உதவும் வகையில் ஆட்டை வெட்டும் கனவு வந்தது. இந்த வேளையில் தான் அதிர்ச்சி சம்பவம் நடந்தது. எனது கையில் எப்படி கத்தி வந்தது என்பதும், இதனை எப்படி செய்தேன் என்பதும் இன்னும் எனக்கு புரியவில்லை” என வருத்தமாக கூறியுள்ளார்.
வீடு முழுவதும் ரத்தம்
இதுபற்றி அவரது மனைவி அட்வோவா கோனாடு கூறுகையில், ‛‛சம்பவம் நடந்தபோது நான் வீட்டில் இல்லை. பயணம் செய்து கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டில் வசிப்பவர் மூலம் தகவல் கிடைத்து உடனடியாக வீட்டுக்கு சென்றேன். வீடு முழுவதும் ரத்தம் இருந்தது. வலியால் துடித்தவரை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளேன். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்” என்றார்.