விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகாவைச் சேர்ந்த பெண் ஒருவர், உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று விருதுநகருக்கு வந்திருக்கிறார். தொடர்ந்து அவர், திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு மீண்டும் பஸ்ஸில் ஊர் திரும்பியிருக்கிறார். இதற்கிடையில் அந்தப் பெண்ணுக்கு நன்கு அறிமுகமான ஆண் நண்பர் ஒருவர் காரில் ஊர் திரும்புவதாக கிடைத்த தகவலையடுத்து பஸ்ஸில் சென்ற அவர், பாலவனநத்தத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கி ஆண் நண்பருடன் காரில் ஊர் திரும்பியிருக்கிறார்.
அவர்கள், அருப்புக்கோட்டை தாலுகாவிலிருந்து கோபாலபுரம் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, இயற்கை உபாதை கழிப்பதற்காக அந்தப் பெண் காரில் இருந்து இறங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில், காரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டுபேர் மற்றும் மற்றொரு காரில் வந்த 5 பேர் சேர்ந்து, அந்தப் பெண்ணை தாக்கி, வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தடுக்க வந்த ஆண் நண்பருக்கும் சரமாரி அடி விழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை காரில் கடத்திச் சென்றவர்கள் ஆள் அரவமற்ற இடத்தில் வைத்து அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. மேலும், அவர் அணிந்திருந்த தங்க நகை, செல்போன், உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு அவரை மீண்டும் அருப்புக்கோட்டை தாலுகாவில் இறக்கி விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, அருப்புக்கோட்டை போலீஸில் அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக, பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலம் மற்றும் பெண் கடத்திச்செல்லப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கண்காணிப்பு மூலம் துப்புத்துலக்கிய போலீஸார் இந்த வழக்கு தொடர்பாக 17 வயது சிறுவன் உட்பட 5 பேரைக் கைதுசெய்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த, தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் ஆகியோர் அருப்புக்கோட்டையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.